முகப்பு
இந்தியா

வெனிசூலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வெனிசூலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 14 பிப்ரவரி 2019, 1:21 am IST
பகிர்:


வெனிசூலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெனிசூலாவில் அதிபர் தேர்தல் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார். இதற்கு அமெரிக்காவும், தென் அமெரிக்க நாடுகள் சிலவும் அங்கீகாரம் அளித்தன. வெனிசூலாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நடவடிக்கையால், கடும் அதிருப்தியடைந்த அதிபர் நிகோலஸ் மடூரோ, அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு தங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வெனிசூலாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பெட்ரோலியோஸ் டி வெனிசூலா (பிடிவிஎஸ்ஏ) மீது கடந்த ஜனவரி 29-ஆம் தேதி அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு வருகை தந்த வெனிசூலா கச்சா எண்ணெய் அமைச்சர் மேனுவல் குவாவிடோ செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், இந்தியாவுக்கும், வெனிசூலாவுக்கும் இடையே மிகச் சிறந்த நல்லுறவு விளங்குகிறது. அந்த நல்லுறவைத் தொடரவே நாங்கள் விரும்புகிறோம். கச்சா எண்ணெய் ஏற்றுமதி உள்ளிட்ட இந்தியாவுடனான வணிக உறவு மேலும் மேம்படுத்தப்படும் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டதாவது: 
வெனிசூலா நாட்டு மக்களுக்குச் சொந்தமான வளங்களைப் பாதுகாக்க அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மற்ற நாடுகளும் அதற்கு உதவ வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். அமெரிக்காவுடனும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுடனும் இந்தியா சிறந்த நல்லுறவைக் கொண்டுள்ளது. 
அதே வேளையில், வெனிசூலாவின் வளங்களைத் திருடி வரும் அதிபர் மடூரோவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்கக் கூடாது. அந்நாடுகளின் கச்சா எண்ணெய் தேவையைக் கருத்தில்கொண்டும்,  அந்நாடுகள் பாதிக்கப்படாத வகையிலும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மற்ற நாடுகள் உதவும் என்று பதிவிட்டிருந்தார். இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் வெனிசூலா 3-ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.