இன்று தில்லி பட்ஜெட் தாக்கல்
2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தில்லி சட்டப்பேரவையில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 26) தாக்கல்
2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தில்லி சட்டப்பேரவையில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 26) தாக்கல் செய்கிறார். தில்லி பட்ஜெட் கூட்டத் தொடர் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் உரையுடன் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது.
துணைநிலை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சனிக்கிழமை (பிப்ரவரி 23) நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 2018-19 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்நிலையில், தில்லி சட்டப்பேரவையில் அவுட்கம் பட்ஜெட்டை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திங்கள்கிழமை தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
2017-18 நிதியாண்டில் தலைநகரில் தில்லியில் 2.90 லட்சம் பேருக்கு கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த 2016-17 நிதியாண்டைக் காட்டிலும் 431 சதவீதம் அதிகமாகும். 2018-19 நிதியாண்டுக்குள் 200 இரவுநேரக் குடில்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 199 இரவுநேரக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரவுநேரக் குடில்களில் நாள்தோறும் சராசரி 12,030 பேர் தங்குகின்றனர். இதன் எண்ணிக்கை 2016-17 நிதியாண்டைக் காட்டிலும் தற்போது 9 சதவீதம் அதிகமாகும்.
திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் நோக்கில் 241 கழிப்பறைக் கூடங்கள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 229 கழிப்பறைக் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதேபோல, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், பின்தங்கிய பிரிவினர் ஆகியோருக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மாநகராட்சிப் பள்ளிகளைவிட 3 மடங்கு 2017-18-இல் அதிகரித்துள்ளது. இதுபோல 2015-16 நிதியாண்டிலிருந்து தற்போது வரை தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 240 சதவீதம் அதிகரித்துள்ளது.
தில்லி அரசின் 301 பள்ளிகளில் நர்சரி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நர்சரி வகுப்புகளில் 95 சதவீதமான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
மிஷன் புனியாத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன் 48 சதவீதத்திலிருந்து 66 சதவீதமாகவும், கணக்கு திறன் 54 சதவீதத்திலிருந்து 73 சதவீதமாக மேம்பட்டுள்ளது என அவுட்கம் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்கிறார். விவாதங்களுக்குப் பிறகு பட்ஜெட் வியாழக்கிழமை (பிப்ரவரி 28) நிறைவேற்றப்படவுள்ளது.