இந்தியா

நிலத்தடி நீர் தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

DIN


நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதற்கான விதிமுறைகள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில் குறைபாடுகள் இருப்பதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், அந்த அறிவிக்கையை அமல்படுத்த வேண்டாம் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டா, கிரேட்டர் நொய்டா, கெளதம புத்த நகர் ஆகிய இடங்களில் நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்து வருவது தொடர்பாக கவலை தெரிவித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கட்டுமான நிறுவனங்களால் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாகவும், அவை எந்தவொரு கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவதில்லை என்றும், வேகமாகக் குறைந்துவரும் நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
அந்த மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்ட தீர்ப்பாயத் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு கூறியதாவது:
நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்து வருவது, மனித இன நலனுக்கு கவலை தரும் விஷயமாகும். நிலத்தடி நீரை உறிஞ்சியெடுப்பது தொடர்பாக, மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கை பல்வேறு குறைகளைக் கொண்டுள்ளது. 
எனவே, அதை அமல்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பதிலாகவும், அந்த நடவடிக்கையை கண்காணிப்பதற்கு அமைப்பு ரீதியிலான நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கு பதிலாகவும், நிலத்தடி நீரை உறிஞ்சும் நடவடிக்கை தடையின்றி நடைபெற அந்த அறிவிக்கை வகை செய்கிறது.
எனவே, நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கான கொள்கையை ஏற்படுத்த நிபுணர்கள் குழு ஒன்றை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகம் அமைக்க வேண்டும். அதில், தில்லி ஐஐடி, ரூர்கி ஐஐடி, ஆமதாபாத் ஐஐஎம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நீதி ஆயோக் மற்றும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த தீர்ப்பாய அமர்வு, அடுத்தகட்ட விசாரணையை மே மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT