ஒடிஸா, கேரளத்தில் வளர்ச்சி திட்டங்கள்: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
ஒடிஸா மற்றும் கேரளத்தில் சரக்கு போக்குவரத்து மையம், ரயில் தடம், நெடுஞ்சாலை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை
ஒடிஸா மற்றும் கேரளத்தில் சரக்கு போக்குவரத்து மையம், ரயில் தடம், நெடுஞ்சாலை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை(ஜன. 15) தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஒடிஸா மாநிலம், ஜார்சுகுடா பகுதியில் ரூ. 100 கோடி செலவில் அதிநவீன சரக்கு போக்குவரத்து மையம் அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டுகிறார். ஏற்றுமதி, இறக்குமதி, உள்நாட்டு சரக்கு போக்குவரத்து ஆகியவை எளிதாக நடைபெறும் வகையில் இந்த சரக்கு போக்குவரத்து மையம் அமைக்கப்படுகிறது. ஜார்சுகுடா ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் இந்த மையம் அமைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள இரும்பு, சிமெண்ட், காகித தொழிற்சாலைகள் அதிக அளவில் பயனடையும்.
அதையடுத்து, ஒடிஸாவின் கடலோரப் பகுதிகளை, மாநிலத்தின் வளர்ச்சியடைந்த பகுதிகளோடு இணைக்கும் வகையில், பலங்கிர்-பிசுபலி இடையே 15 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. அதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நிறுவுகிறார்.
இந்த ரயில் பாதை, புவனேசுவரம், புரி ஆகிய நகரங்களில் இருந்து தில்லி, மும்பை ஆகிய வெளிமாநில நகரங்களுக்கு செல்வதற்கான பயண நேரத்தை குறைக்கும் வகையில் அமையும்.
அதைத்தொடர்ந்து பர்பலி-துங்கரிபலி மற்றும் பலங்கிர்-தேவ்கான் ஆகிய பாதைகளின் சாலை அகலத்தை இரட்டிப்பாக்கும் திட்டமும் அறிவிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தால் ஒடிஸாவின் தொழில்துறை ஊக்குவிக்கப்படும்.
கேரளத்தில்...: அதையடுத்து, கேரளம் மாநிலம் செல்லும் பிரதமர், அங்கு கொல்லம் நெடுஞ்சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த சாலை, இரு வழித்தடங்களை கொண்டதாக இருக்கும். அஷ்டமுதி ஏரியின் மீது 3 பாலங்களும் இந்த திட்டத்தின் மூலம் கட்டப்படும். இந்த சாலை திட்டத்தால், ஆலப்புழை மற்றும் திருவனந்தபுரம் இடையேயான பயண நேரம் குறையும்.
அதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலுக்கு பிரதமர் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமராக பதவியேற்றபின்பு மூன்றாவது முறையாக மோடி கொல்லம் செல்கிறார். இதற்கு முன்பு சிலை திறப்பு நிகழ்ச்சிக்காகவும், கொல்லம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்காகவும் அவர் கொல்லம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.