இந்தியா

பயிர்க்கடன் தள்ளுபடி தற்காலிக தீர்வுதான்:  துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு

DIN


விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு, நீண்ட கால தீர்வுகளே அவசியமாக உள்ளன; பயிர்க்கடன் தள்ளுபடி என்பது தற்காலிக தீர்வுதான் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும், இத்துறையை வலுப்படுத்துவதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் அளவில் அமைப்புரீதியிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வேளாண் துறை தொலைநோக்கு பார்வை-2019 என்ற பெயரில் தில்லியில் இரண்டு நாள் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது. இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
நான் பயிர்க்கடன் தள்ளுபடி நடவடிக்கைக்கு எதிரானவன் இல்லை. இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு போதிய திறனும் வளமும் வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் பயிர்க்கடன் தள்ளுபடி நடவடிக்கையை மேற்கொள்வது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்.
விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு, நீண்ட கால தீர்வுகளே அவசியம். முறையான சாலை, மின்சார வசதி; பற்றாக்குறையின்றி தண்ணீர் கிடைப்பது, பதப்படுத்துதலுக்கு தேவையான உபகரணங்கள், முறையான சந்தை கட்டமைப்பு, உரிய நேரத்தில் கடன் கிடைப்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயத் துறையில் நிலைத் தன்மையை உறுதி செய்வது, நமது நாட்டுக்கு மட்டுமன்றி உலகுக்கும் முக்கியமானதாகும். இத்துறை எதிர்கொண்டுள்ள சவால்களை திறனுடன் எதிர்கொள்வதற்காக, அறிவியல்- தொழில்நுட்பரீதியிலான புத்தாக்கங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புத்தாக்கங்களின் பலன்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்: விவசாயத் தொழிலை, மக்கள் சிறிது சிறிதாக கைவிட்டு வருவது கவலையளிக்கிறது. உரிய லாபம் கிடைக்காததால், விவசாயத் தொழிலை கைவிடும் நிலை ஏற்படுகிறது. எனவே, படித்த இளைஞர்கள் மீண்டும் கிராமங்களுக்கு திரும்பி, விவசாயத்தில் ஈடுபட வேண்டும். அப்போதுதான், இத்துறையை லாபம் மிகுந்த துறையாக மாற்ற முடியும் என்றார் வெங்கய்ய நாயுடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT