ஆந்திரத்தில் தனித்து போட்டி: காங்கிரஸ்
ஆந்திரத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று
ஆந்திரத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். மேலும், ஆந்திரத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியுடனான கூட்டணி, தேசிய அளவிலானது என்றும், ஆந்திரத்தைப் பொறுத்தவரை கூட்டணி கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தெலங்கானாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, காங்கிரஸ் போட்டியிட்டது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 21 இடங்களை மட்டுமே கைப்பற்றிய இக்கூட்டணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஆந்திர மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன், அக்கட்சியின் பொதுச் செயலரும் கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி அமராவதியில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திரத்தில் மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், 25 மக்களவைத் தொகுதிகளிலும் நாங்கள் தனித்து போட்டியிடவுள்ளோம். மக்களவைத் தேர்தலுக்காக கட்சியின் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க வரும் 31-ஆம் தேதி மீண்டும் கூட்டம் நடத்தப்படும். ஆந்திரத்தின் 13 மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் அடுத்த மாதம் பேருந்து யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் உம்மன் சாண்டி. மேலும், பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த அவர், தேசிய அரசியலைப் பொறுத்தவரை, பிரியங்காவைப் போன்ற புத்திசாலித்தனமும் துணிவும் கொண்ட தலைவர் அவசியம். நமது நாட்டு மக்கள், ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகின்றனர் என்றார்.