முகப்பு
இந்தியா

குஜராத் கலவர வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கு ஜாமீன்

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நேரிட்ட கலவரம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 4 பேருக்கு ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Updated On : 24 ஜனவரி 2019, 1:23 am IST
பகிர்:


குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நேரிட்ட கலவரம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 4 பேருக்கு ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலம், கோத்ராவில் கடந்த 2002ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்த சபர்மதி விரைவு ரயிலுக்கு மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதில் ரயிலில் பயணம் செய்த கரசேவகர்கள் 59 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.
அப்போது நரோடா பாட்டியா எனுமிடத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தில், 97 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதுதொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 29 பேரில், பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 17 பேரை குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும், உமேஷ் பாய் சுராபாய் பரத்வத், ராஜ்குமார், பத்மேந்திரசிங் ஜஸ்வந்த் சிங் ராஜ்புத், ஹர்ஷத், பிரகாஷ்பாய் சுரேஷ்பாய் ரத்தோட் ஆகிய 5 பேர் உள்பட 12 பேரை குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், தங்களுக்கு ஜாமீன்கோரியும் உச்சநீதிமன்றத்தில் உமேஷ் பாய் சுராபாய் பரத்வத், ராஜ்குமார், பத்மேந்திரசிங் ஜஸ்வந்த் சிங் ராஜ்புத், ஹர்ஷத், பிரகாஷ்பாய் சுரேஷ்பாய் ரத்தோட் ஆகிய 5 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம். கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது 5 பேரின் ஜாமீன் மனுவையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. அத்துடன், உமேஷ் பாய் சுராபாய் பரத்வத், ராஜ்குமார், பத்மேந்திரசிங் ஜஸ்வந்த் சிங் ராஜ்புத், ஹர்ஷத் ஆகிய 4 பேருக்கும் ஜாமீன் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பிரகாஷ்பாய் சுரேஷ்பாய் ரத்தோட்டுக்கு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ள அவரது மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள 19 நாள்கள் மட்டும் இடைக்கால ஜாமீன் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.