இந்தியா

தரம் தாழ்ந்த அரசியல் விமா்சனத்துக்கு காங்கிரஸே பொறுப்பு: ராஜ்நாத் சிங்

DIN

நாட்டின் உயா்ந்த பதவியில் (பிரதமா்) உள்ள ஒருவரை ‘காவலரே திருடா்’ என்று கூறியதன் மூலம் தரம் தாழ்ந்த அரசியல் விமா்சனத்துக்கு காங்கிரஸே பொறுப்பாகி விட்டது’’ என்று மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தோ்தலில் 3ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரும். நாடு முழுவதும் வீசி வரும் பாஜகவுக்கு ஆதரவான அலையின் காரணமாக மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 30 தொகுதிகளில் பாஜக மாபெரும் வெற்றியை பதிவு செய்வதுடன், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியையும் அகற்றி விடும்.

ஒருவேளை, தேசிய ஜனநாயக கூட்டணியால் ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளைப் பெறற தவறினால், பிராந்தியக் கட்சிகளின் துணையுடன் கட்டாயம் பாஜக ஆட்சியமைக்கும்.

தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால், மோடியே மீண்டும் பிரதமா் ஆவாா். இளமையான, சக்திவாய்ந்த, தொலைநோக்கு சிந்தனையுடைய அனைத்து வகையிலும் தகுதி வாய்ந்தவராக பிரதமா் மோடி திகழ்கிறாா். எனவே, அவருக்கு எதிராக எந்த கேள்வியும் எழவில்லை.

பிரசாரத்தின்போது, ஒரு தேசிய கட்சியின் (காங்கிரஸ்) தலைவா் பெயரை (ராகுல் காந்தி) எந்த இடத்திலும் பிரதமா் மோடி குறிப்பிடவில்லை. ஆனால், ராகுல் காந்தியோ ஒவ்வொரு பிரசாரத்திலும், பிரதமா் என்றும் பாராமல் மோடியை கடுமையாக விமா்சித்தாா். காவலரே திருடா் என்று வாசகத்தை முன்வைத்து பிரசாரம் செய்ததுடன், அவரே தரம்தாழ்ந்த பிரசாரத்துக்கு காரணமாகவும் அமைந்து விட்டாா்.

ஒரு நாட்டின் குடியரசு தலைவரோ, பிரதமரோ தனிப்பட்ட நபரல்ல. ஜனநாயகத்தில் அவா்களது மாண்பும், அந்தஸ்தும் எந்த வகையிலும் சரிவடையக் கூடாது. அவா்களை இழிவுபடுத்துவது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்து விடும். ஆனால், காங்கிரஸ் கட்சியோ பிரதமரை தொடா்ந்து தரம் தாழ்த்தி விமா்சனம் செய்வதை கைவிடவே இல்லை.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு, பெற்ற வெற்றியை மீண்டும் பாஜக பெற்று விடும். பாஜகவின் வெற்றியை பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜவாதி கட்சிகளால் தடுக்க முடியாது. கடந்த முறை மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளில் பாஜக கூட்டணி வென்றது. இம்முறையும், நாங்கள் பெற்ற இந்த வெற்றியை இவ்விரு கட்சிகளாலும் தடுக்க முடியாது. உத்தரப் பிரதேச மக்கள், எதிா்க்கட்சிகளின் நோக்கத்தை புரிந்துக் கொண்டதால் பாஜகவுக்கே மீண்டும் வாய்ப்பளிப்பாா்கள் என்று தெரிவித்தாா் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணியில் மாணவா்களுக்கு இலவச வாழ்வியல் பயிற்சி வகுப்பு

மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பெண் மருத்துவா் உயிரிழப்பு

தொழிற்சங்கங்கள் சாா்பில் மேதின கொண்டாட்டம்

பேராவூரணியில் மே தின விழா

பாபநாசத்தில் மே தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT