இந்தியா

சுயசரிதை எழுதிய கேரள காவல்துறை இயக்குநருக்கு எதிராக வழக்குப்பதிவு

DIN


சுயசரிதை புத்தகம் எழுதிய கேரள காவல்துறை இயக்குநர் ஜேக்கப் தாமஸுக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
ஏற்கெனவே, பணிக்கான விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் 18 மாத பணியிடை நீக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில், சுறாக்களுடன் நீச்சல் என்ற பெயரில் அவர் சுயசரிதை எழுதியுள்ளார். உயர் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் அவர் சுயசரிதை எழுதியதாகவும், அதில் பணிசார்ந்த ரகசியங்களை வெளியிட்டதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
கேரள அரசின் தலைமைச் செயலர் டாம் ஜோஸ் அறிவுறுத்தலின் பேரில், பொது நிர்வாகத் துறை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை குற்றப் பிரிவு ஜேக்கப் தாமஸுக்கு எதிராக அந்த வழக்கை பதிவு செய்துள்ளது. 
அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். கேரள அரசு அவர் மீது மேற்கொள்ளும் துறை ரீதியான விசாரணை அடிப்படையில் அவர் பணிநீக்கம் செய்யப்படலாம். 
ஜேக்கப் தாமஸ் தனது சுயசரிதை புத்தகத்தில், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை விமர்சித்ததுடன், சர்ச்சைக்குரிய சில ஊழல் வழக்கு விசாரணைகள் எவ்வாறு தடுக்கப்பட்டன என்றும் விளக்கியுள்ளார். 
இதனிடையே, தனது புத்தகம் இலக்கிய ரீதியிலானது என்பதால் உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று கூறியுள்ள ஜேக்கப் தாமஸ், ஏற்கெனவே பொதுவெளியில் இருக்கும் தகவல்களையே தனது புத்தகத்தில் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 
மேலும், எனது சுயசரிதை புத்தகத்துக்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது, கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு எனக்கெதிராக மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஜேக்கப் தாமஸ் கூறியுள்ளார். 
ஜேக்கப் தாமஸின் சுயசரிதை தொடர்பாக ஒன்று, அரசுக்கு எதிரான அவரது கருத்து தொடர்பாக மற்றொன்று என இரு விசாரணை அறிக்கைகளை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ராஜீவ் சதானந்தன் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT