இந்தியா

மோடியை விளம்பரப்படுத்தியதால் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி:  சசி தரூர்

DIN


பிரதமர் நரேந்திர மோடியை பாஜக சரியான முறையில் விளம்பரப்படுத்தியதாலும், அவர் தன்னை அசாதாரண திறமைகளைக் கொண்டவராகக் காட்டிக் கொண்டதாலும், மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், பிடிஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த சசி தரூர், தேர்தல் தோல்வி குறித்து கூறியதாவது:
45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இவையெல்லாம், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும் என்று கணித்திருந்தோம். ஆனால், மக்கள் தங்களுடைய பொருளாதார நலன் கருதி இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது தெரிகிறது. அதற்கான காரணங்களை விரிவாக ஆராய வேண்டியுள்ளது.
குறிப்பாக, நரேந்திர மோடியை பாஜக மிகச்சரியான முறையில் சந்தைப்படுத்தியுள்ளது. அவரும் தன்னை அசாதாரண திறமைகளைக் கொண்டவராகக் காட்டிக் கொண்டார்.
நவீன இந்தியாவின் அரசியல் வரலாற்றில், கற்பனைக்கும் அப்பால் சர்வ வல்லமை கொண்ட நபராக நரேந்திர மோடி சித்திரிக்கப்பட்டார். இதற்காக, சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானோர் இயங்கினர். தொலைக்காட்சிகளில் அவரைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதற்காக, மக்களின் வரிப்பணம் ரூ.5,600 கோடி செலவானது. இதுமட்டுமன்றி, மத்திய பாஜக அரசு தனது திட்டங்களை அளவுக்கு அதிகமாக விளம்பரப்படுத்தி, அதை வெற்றியாக 
அறுவடை செய்து கொண்டது.
ஆனால், அந்த திட்டங்களில் உள்ள குறைபாடுகள், கள நிலவர உண்மைத்தன்மை ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்று நாங்கள் பிரசாரம் செய்திருக்கலாம்.
மேலும், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல், பாலாகோட் பதிலடி தாக்குதல் ஆகிய சம்பவங்களுக்குப் பிறகு, தேசப்பாதுகாப்பு விவகாரத்தை தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தி நாங்கள் வாக்காளர்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றிருக்கலாம். அவற்றைக் கவனிக்கத் தவறிவிட்டோம். ஆனால், பாஜகவோ, அதை தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளது.
குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். ஒருவேளை இந்த திட்டத்தை 6 மாதங்களுக்கு முன்பாகவே அறிவித்திருந்தால், மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். மேலும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கான சரியான காரணங்களை வரும் வாரங்களில் விரிவாக ஆராய்வோம் என்றார் சசி தரூர்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் தோல்வியடைந்தபோதிலும், திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட சசி தரூர் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT