இந்தியா

அமித் ஷாவை மிஞ்சினாரா அஜித் பவார்! புரியாத புதிர்கள்.. மகா 'ட்விஸ்ட்' இன்னும் முடியல..

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்திற்கு பின்னர் அம்மாநிலத்தில் அரசியல் சூழல் அமைதி கண்டுள்ளது.

Muthumari

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்திற்கு பின்னர் அம்மாநிலத்தில் அரசியல் சூழல் சற்று அமைதி கண்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், அக்.24 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதுவரை மகாராஷ்டிர தேர்தல்களில் சிவசேனை அதிக இடங்களைப் பெற்று வந்த நிலையில், முதல்முறையாக பாஜக அதிக இடங்களை பெற்றது. 

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக 105 இடங்களையும், சிவசேனை 56 இடங்களையும் கைப்பற்றியது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள இந்த இரு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக - சிவசேனை இடையே மோதல் தொடங்கியது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் என்று சிவசேனை தொடர்ந்து அடம்பிடிக்க, பாஜக சற்று விட்டுத்தான் பிடித்தது. இருந்தும் இறுதிவரை உடன்பாடு எட்டப்படவில்லை. தங்களது ஆதரவு இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியாது என்று சிவசேனையும் இறங்கி வரவில்லை. பாஜக, தங்களது குரலுக்கு செவிசாய்க்காததால், பரம எதிரியான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைய சிவசேனை முடிவெடுத்தது அரசியலில் ஒரு 'மகா' திருப்புமுனையே.

ஆண்டாண்டு காலமாக பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வந்த சிவசேனைக்கு, அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, வேறு ஒரு பாதையை காட்டியுள்ளார். மகாராஷ்டிர அரசியலில் இது புதிய அத்தியாயமாகவே  பார்க்கப்படுகிறது.

இதுவரை தாக்கரே குடும்பத்தில் இருந்து யாரும் முதல்வர் அரியணையில் ஏறாத நிலையில், இந்த முறை வாய்ப்பை தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக கூட சிவசேனை முயற்சித்திருக்கலாம். சுழற்சி முறைக்கு ஒத்துகொள்ளாத பாஜகவுக்கு முன், முதல்வராகி காட்ட வேண்டும் என்ற வேகத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது.

முற்றிலுமாக எதிர்மறையான கொள்கைகளைக் கொண்ட சிவசேனையும், காங்கிரஸும் இணையும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. என்.சி.பி தலைவர் சரத் பவார் தான் இந்தக் கூட்டணிக்கு அடித்தளம் வகுத்துள்ளார் என்று சொல்லலாம். கொள்கைகள் முரண்படுவதால்தான் என்னவோ காங்கிரஸும் முதலில் எந்த முடிவும் சொல்லாமல் பல நாட்கள் அமைதி காத்தது. கூட்டணி வைத்தபிறகு கொள்கை ரீதியான பிரச்னைகளை அணுக வேண்டுமே.. ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி கண்ட காங்கிரஸ் கட்சி, இதிலும் தவறான முடிவு எடுத்துவிடக்கூடாது என்று பொறுமை காத்திருக்கலாம். அந்த வகையில் அந்த பொறுமை சரியானது தான். 

சிவசேனை - காங்கிரஸ் - என்.சி.பி கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதுமே சுதாரித்துக்கொண்ட பாஜக, தெளிவாக சரத் பவாருக்கு தூண்டில் போடாமல் அஜித் பவாரை இழுத்தது. ஏற்கனவே பவார் குடும்பத்திற்குள்ளே பதவி குறித்த சில பிரச்னைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பாஜக அதனை பயன்படுத்திக்கொண்டது. சரி, இதற்கு அஜித் பவாரை ஏன் இழுக்க வேண்டும் என்று யோசித்தால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார சமயத்தில் தான் அஜித் பவார் மீதான ஊழல் வழக்குகள் பல பாஜகவின் பிரச்சாரத்தின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்தன. தேர்தலில் என்.சி.பிக்கு இது சற்று பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. இதைவைத்து தான் பாஜக, அஜித் பவாரிடம் முன்கூட்டியே பேசியுள்ளதாகத் கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வரை மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தான் என்றும் சிவசேனை - காங்கிரஸ் - என்.சி.பி கூட்டணி ஆட்சி அமைகிறது என்றும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அடுத்த நாள் காலை அனைவருக்குமே அதிர்ச்சி. தேவேந்திர பட்னவீஸ் முதல்வராக பதவியேற்றார். கூடவே, துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். மூன்று மணி நேர சினிமாவில் கூட இப்படி ஒரு ட்விஸ்ட்டை நாம் பார்த்திருக்க முடியாது.  அரசியல் தார்மீகத்தை மீறி பாஜகவும், அஜித் பவாரும் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

பின்னர், அஜித் பவாரின் முடிவுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறி கட்சியின் பதவியில் இருந்து அஜித் பவாரை நீக்கி உத்தரவிட்டார் சரத் பவார். ஆனால், கட்சியின் தலைவருக்கு, அதிலும் தனது சித்தப்பாவிற்கு தெரியாமல் அஜித் பவார் இப்படி முடிவெடுத்திருப்பாரா என்பது சந்தேகமாகத் தான் இருக்கிறது. 

முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முறைகேடு வழக்கில் அஜித் பவார் மீது அமலாக்கத்துறை வழக்கில், சரத் பவாரின் பெயரும் சேர்க்கப்பட்டதற்கு, 'என்னால் தான் எனது சித்தப்பாவும் களங்கப்படுத்தப்படுகிறார்' என்று கூறி, கண்ணீர் விட்டு அழுதார். அப்படி இருக்கையில், சிவசேனையுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து பதவியேற்கவிருந்த நிலையில் அஜித் பவார் எப்படி இந்த முடிவை தன்னிச்சையாக எடுத்திருக்கக்கூடும்? இல்லையெனில் அவர் தனியே ஏதும் திட்டம் வகுத்திருப்பாரோ?

இறுதியில், நான்கு நாட்களில் பாஜக ஆட்சி கலைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று அஜித் பவார் ராஜினாமா செய்ய, தொடர்ந்து முதல்வர் பட்னவீஸ்-ம் ராஜினாமா செய்தார். முடிவாக, சிவசேனை - காங்கிரஸ் - என்.சி.பி கூட்டணி ஆட்சி அமைகிறது. பாஜகவுடன் நான்கு நாட்கள் ஐக்கியமான அஜித் பவாரை சிறு எதிர்ப்புமின்றி சரத் பவார் மட்டுமில்லாது கூட்டணி கட்சியான சிவசேனையும் மன்னித்து ஏற்றுக்கொண்டது தனிப்பட்ட முறையில் சிலருக்கு அதிர்ச்சியாகத்தான் உள்ளது.

இதற்கிடையே, பாஜகவில் இணைந்த ஒரு சில மணி நேரங்களிலேயே அஜித் பவார் மீதான ஊழல் வழக்குகள் உள்ளிட்ட 9 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாக செய்தியாக வெளியாகின. முன்னதாக, இரவு முழுவதும் கடுமையாக உழைத்த அமித் ஷாவை 'அரசியல் சாணக்கியர்' என்று பாஜகவினர் புகழ்ந்த நிலையில், இன்று அமித் ஷாவையே ஒருபடி மிஞ்சி விட்டார் அஜித் பவார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. ஆனால், உண்மையில், நீர்பாசனத்திட்ட ஊழல் தொடர்பான 9 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கும் அஜித் பவாருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பரம்வீர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அஜித் பவார் தொடர்பான வழக்குகள் முடிக்கப்படவில்லை என்பதை உறுதியாகக் கூற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், அரசியல் நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றில் திட்டமிட்டு அதன்படி வெற்றியும் கண்டுள்ள அமித் ஷாவுக்கு இது சறுக்கல்தான். மத்தியில் ஆட்சியில் இருந்தால், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற தவறான ஒரு உதாரணத்தை எதிர்கால இந்திய அரசியல் கட்சியினருக்கு எடுத்துக்கூறுவதாகவே உள்ளது.

வழக்கமாக, மாற்று திட்டத்தை வகுத்து வைத்திருக்கும் அமித் ஷாவும், தனக்கு 54 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்று அஜித் பவார் கூறியதை நம்பி, இறங்கியது அதிர்ச்சியாகவே உள்ளது. எனினும், அரசியலில் எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதேபோன்று மகாராஷ்டிர அரசியல் நிகழ்வில், ஆளுநரும் 'சில சமயங்களில்' தனது வரம்பை மீறியே செயல்பட்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. கடைசியாக உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுவும் தற்காலிக முற்றுப்புள்ளி தான் என்பதையும் நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

தமிழக அரசியலில் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் இருந்த அந்த 70 நாட்கள் என்ன நடந்தது என்று இதுவரை மர்மமாக உள்ளது போல, மகாராஷ்ராவில் நிகழ்ந்த அரசியல் குழப்பங்களுக்கும் எதிர்காலத்தில் பதில் கிடைக்கும் என்று நம்புவோம்.. 

அதே நேரத்தில், மகாராஷ்ராவில் இனியும் சில திருப்புமுனை சம்பவங்கள் அரங்கேறலாம். கர்நாடகாவைப் போன்று அதிக இடங்கள் வெற்றி பெற்ற பாஜக சும்மா இருக்குமா என்ன? 'ஒரே தேசம்; ஒரே கட்சி' கொள்கையை முன்னெடுக்கும் பாஜக, கண்டிப்பாக மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்ற முனையும். சிவசேனை - காங்கிரஸ் - என்.சி.பி கூட்டணியின் மாறுபட்ட கொள்கைகளும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம். கொள்கைகளை மறந்து அனைத்திலும் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே சிவசேனை கூட்டணி கட்சி மகாராஷ்டிராவில் தொடரும்.. 

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT