உருமாறிய கரோனா தீநுண்மியால் இந்தியாவில் 38 பேர் பாதிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்
பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தீநுண்மியால் இந்தியாவில் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புது தில்லி: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தீநுண்மியால் இந்தியாவில் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
கரோனா தீநுண்மியில் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக பிரிட்டனில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்நாட்டில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் டிசம்பர் 23 -ஆம் தேதி முதல் ஜனவரி 7 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்மைக் காலங்களில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த பயணிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஆர்டி - பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
இதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் பரிசோதனை மாதிரிகள், இந்திய சார்ஸ் கொவைட் - 2 மரபணு வரைபட கூட்டமைப்பின் (ஐஎன்எஸ்ஏசிஓஜி) கீழ் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
மரபணு வரைபட கூட்டமைப்பின் கீழ் உள்ள 10 அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளைப் பரிசோதித்ததில் உருமாறிய கரோனா தீநுண்மியால் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் பயணித்தவர்கள், குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணிக்கும் பணிகளும், அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை மரபணு பரிசோதனைக்குட்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நிலைமையைத் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், புதிய தீநுண்மி தொடர்பான கண்காணிப்பு, தனிமைப்படுத்துதல், பரிசோதனை மேற்கொள்ளுதல், மாதிரிகளை மரபணு பரிசோதனைக்காக அனுப்பிவைப்பது போன்றவை தொடர்பாக மாநிலங்களுக்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தீநுண்மி, இந்தியாவைப் போன்றே டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.