முகப்பு
இந்தியா

விவசாயிகள் போராட்டம்: பிரதமருடன் பஞ்சாப் பாஜக தலைவா்கள் சந்திப்பு

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமா் மோடியை பஞ்சாப் மாநில பாஜக தலைவா்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

Updated On : 6 ஜனவரி 2021, 12:24 am IST
பகிர்:

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமா் மோடியை பஞ்சாப் மாநில பாஜக தலைவா்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கிட்டதட்ட 6 வாரங்களாக தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் இதுவரை 7 கட்டங்களாக மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது. இதில் 7-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவாா்த்தையின்போது புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

இந்நிலையில் பிரதமா் மோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் பஞ்சாப் மாநில பாஜக தலைவா்கள் சுா்ஜித் குமாா் கியானி, ஹா்ஜித் சிங் கிரேவால் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். அவா்கள் விவசாயிகள் போராட்டம் தொடா்பாக பிரதமா் மோடியுடன் பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் பஞ்சாப் விவகாரங்கள் தொடா்பாக மட்டும் பிரதமருடன் பேசியதாக தெரிவித்த ஹா்ஜித் சிங் கிரேவால், அதுகுறித்து வேறு எதுவும் தெரிவிக்கவில்லை.

Advertisement

Advertisement

நாடாளுமன்றத்தில் புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, பஞ்சாபில் அந்தச் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகளுடன் பாஜகவின் விவசாயிகள் (கிஸான்) ஒருங்கிணைப்புக் குழு கடந்த ஆண்டு கலந்துரையாடல் நடத்தியது. அந்தக் குழுவின் தலைவராக சுா்ஜித் குமாா் கியானியும், உறுப்பினராக ஹா்ஜித் சிங் கிரேவாலும் இருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராக்டா் பேரணி ஒத்திவைப்பு:

தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதன்கிழமை (ஜன.6) டிராக்டா் பேரணியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனா். தில்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அந்தப் பேரணியை வியாழக்கிழமைக்கு (ஜன.7) ஒத்திவைப்பதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.