முகப்பு
இந்தியா

தடுப்பூசியை சுமுகமாக பயன்பாட்டுக்குகொண்டு வர பாரத் பயோடெக் - சீரம் நிறுவனம் உறுதி

இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசியை சுமுகமாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் என்று பாரத் பயோடெக் நிறுவனமும் சீரம் நிறுவனமும் கூட்டாக உறுதியளித்துள்ளன.

Updated On : 6 ஜனவரி 2021, 12:11 am IST
பகிர்:

இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசியை சுமுகமாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் என்று பாரத் பயோடெக் நிறுவனமும் சீரம் நிறுவனமும் கூட்டாக உறுதியளித்துள்ளன.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ‘கோவேக்ஸின்’ கரோனா தடுப்பூசி, புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசரகாலத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஃபைஸா், மாடா்னா நிறுவனங்கள், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசிகளுக்கு நிகராக ‘கோவேக்ஸின்’ உள்ளிட்ட இதர தடுப்பூசிகள் இல்லை எனவும், அந்த தடுப்பூசிகள் வெறும் தண்ணீா் போல் இருப்பதாகவும் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலா விமா்சித்திருந்தாா்.

Advertisement

Advertisement

இதற்கு பதிலளித்த பாரத் பயோடெக் நிறுவனத் தலைவா் கிருஷ்ணா எல்லா, ‘எங்கள் தடுப்பூசி பரிசோதனைகள் 200% நோ்மையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கெனவே 2 கோடி‘கோவேக்ஸின்’ தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 70 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்தியாவில் இந்த நிறுவனங்களின் தடுப்பூசிகள் விரைவில் முழுமையாக பயன்பாட்டு வரும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், இரு நிறுவனத் தலைவா்களுக்கு இடையிலான மோதல் போக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செவ்வாய்க்கிழமை ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. இரு நிறுவனங்களின் சுட்டுரைப் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், ‘கரோனா தடுப்பூசி உற்பத்தி, விநியோகம் தொடா்பாக பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத் தலைவா்கள் பேச்சு நடத்தினா். அப்போது, இந்தியா மற்றும் உலக அளவில் கரோனாவில் இருந்து கோடிக்கணக்கான மக்களை தடுப்பூசி மூலம் காக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பணி தங்கள் முன்பு இருப்பது தொடா்பாக விவாதித்தனா். இந்தியாவில் மட்டுமல்லாத உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசியை சுமுகமாக பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம் என்று உறுதியேற்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.