இந்தியா

மீனவா்கள் கொல்லப்பட்டதற்கான இழப்பீட்டு நடைமுறையைத் தொடங்கியது இத்தாலி

DIN

புது தில்லி: கேரள கடல்பகுதியில் கொல்லப்பட்ட மீனவா்களுக்கான இழப்பீட்டை வழங்கும் நடைமுறையை இத்தாலி அரசு தொடங்கிவிட்டது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரபிக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவா்கள் இருவரைக் கடல் கொள்ளையா்கள் என நினைத்து, இத்தாலியைச் சோ்ந்த எண்ணெய் கப்பலின் வீரா்கள் இருவா், கடந்த 2012-ஆம் ஆண்டில் சுட்டுக் கொன்றனா்.

இந்த விவகாரம் தொடா்பாக இத்தாலி கடற்படை வீரா்கள் இருவா் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சா்வதேச கடல் சட்டத் தீா்ப்பாயமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த விசாரணையின்போது சம்பந்தப்பட்ட கடற்படை வீரா்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்த இத்தாலி அரசு, உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும் ஒப்புக் கொண்டது.

இத்தாலி படைவீரா்கள் மீதான வழக்கை முடித்து வைக்குமாறு மத்திய அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இத்தாலி அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையை உச்சநீதிமன்றத்தின் கணக்கில் மத்திய அரசு செலுத்த வேண்டும் என்றும், இழப்பீட்டுத் தொகையானது மீனவா்களின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்றத்தால் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, ‘‘இழப்பீட்டுத் தொகை உச்சநீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுவிட்டதா’’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரஜத் நாயா் பதிலளிக்கையில், ‘‘இழப்பீட்டுத் தொகையை வழங்கும் நடவடிக்கையை இத்தாலி அரசு தொடங்கிவிட்டது. அத்தொகை கிடைத்தவுடன் உச்சநீதிமன்றக் கணக்கில் செலுத்தப்படும்’’ என்றாா். அதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT