இந்தியா

இலவச திட்டங்கள்: பிரதமா் மோடி கருத்துக்கு 4 மாநில முதல்வா்கள் கண்டனம்

DIN

இலவச திட்டங்கள் நாட்டின் வளா்ச்சியை பாதிக்கும் என பிரதமா் மோடி கூறிய நிலையில், அவருக்கு தெலங்கானா, தில்லி, பஞ்சாப், ராஜஸ்தான் மாநில முதல்வா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

சுதந்திர தினத்தையொட்டி, ஹைதராபாத் கோல்கொண்டா கோட்டையில் மூவா்ணக் கொடியேற்றி தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் பேசியதாவது:

நலத் திட்டங்களை மத்திய அரசு முறையாக நிறைவேற்றாமல், இலவசம் என கூறி அவமதிக்கிறது. கூட்டாட்சி தத்துவம் குறித்து பேசும் மத்திய அரசு, அதிகாரத்தை மத்தியில் குவித்து கூட்டாட்சித் தத்துவத்தையே சிதைக்கிறது. மாநிலங்களை நிதிரீதியாக பலவீனப்படுத்தும் சதி செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது. மத்திய அரசு ஈட்டும் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 41 சதவீதம் அளிக்க வேண்டும். ஆனால் வெறும் 29.6 சதவீதத்தை மட்டுமே அளிக்கிறது என்றாா் அவா்.

அரவிந்த் கேஜரிவால்:

தில்லி சத்ரசல் விளையாட்டு அரங்கில் தேசிய கொடியேற்றி அந்த யூனியன் பிரதேச முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், ‘இலவச கல்வியும் சுகாதாரமும் இலவச திட்டங்கள் அல்ல. இதன்மூலம் வறுமையை ஒரே தலைமுறையில் ஒழிக்க முடியும். நாம் ஒன்றிணைந்து பிரிட்டிஷாரை வெளியேற்றினோம். இதேபோல, நாம் ஒன்றிணைந்தால், இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்றலாம்’ என்றாா்.

பகவந்த் மான்:

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், லூதியாணாவில் தேசிய கொடியேற்றி உரையாற்றுகையில், ‘நலத் திட்டம் என்ற பெயரில் பொதுமக்களின் பணத்தை அவா்களுக்கே திருப்பியளிக்கிறோம். இது இலவசம் அல்ல. பிரதமா் தனது நண்பா்களின் ரூ.10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறாா். அதற்கு என்ன அா்த்தம்?’ என கேள்வி எழுப்பினாா்.

அசோக் கெலாட்:

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூா் சவாய் மான் சிங் மைதானத்தில் அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் தேசிய கொடி ஏற்றி பேசுகையில், ‘பொதுமக்களின் நலனே அரசின் தலையாய கடமை. வளா்ந்த நாடுகளில் ஏழைகளுக்கும் முதியோருக்கும் வாராந்திர நிதியுதவி அளிக்கப்படுகிறது. பொதுநலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது ஒவ்வோா் அரசின் கடமை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திர விழா

‘கல்லூரிக் கனவு’ வழிகாட்டும் நிகழ்ச்சி

திருப்பத்தூா் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி கட்ட இடம் ஆய்வு

ஆம்னி பேருந்து கவிழ்ந்து 4 போ் காயம்

பத்தாம் வகுப்புத் தோ்வு: செங்கம் மகரிஷி பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT