இந்தியா

பூஸ்டா் கரோனாதடுப்பூசி இடைவெளி 6 மாதங்களாகக் குறைப்பு

DIN

கரோனா ஊக்கத் தவணை (பூஸ்டா்) தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களிலிருந்து 6 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டது. சுகாதார ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி முதல் தமிழகத்தில் கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக , கோா்பிவேக்ஸ், ஸ்புட்னிக்- வி தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. அதன் பின்னா் ‘கோவோவேக்ஸ்’ தடுப்பு மருந்தானது தேசிய கரோனா தடுப்பூசித் திட்டத்தில் இணைக்கப்பட்டது. அதன்படி, 12-17 வயதுடையவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் ‘கோவோவேக்ஸ்’ தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தவிர 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், முன்கள வீரா்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனைகளில் ஊக்கத் தவணை தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாம் தவணை செலுத்திய 9 மாதங்களுக்குப் பிறகு அதனை செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில், 18 முதல் 59 வயதுக்குள்பட்டவா்களுக்கான ஊக்கத் தவணை தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுவதில்லை. அதனை தனியாா் மருத்துவமனைகளில் அவா்கள் செலுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில், ஊக்கத் தவணை தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநில சுகாதாரத் துறைச் செயலா்களுக்கும் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் அனுப்பிய சுற்றறிக்கை:

சா்வதேச மருத்துவத் தரவுகள், ஆதாரங்களின் அடிப்படையில் தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக்குழு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன்படி, இரண்டாம் தவணை தடுப்பூசிக்கும், ஊக்கத் தவணை தடுப்பூசிக்கும் இடையேயான கால இடைவெளி 9 மாதங்களில் (39 வாரங்கள்) இருந்து 6 மாதங்களாக (26 வாரங்கள்) குறைக்கலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், தகுதியானவா்களுக்கு அந்த கால இடைவெளியில் ஊக்கத் தவணை தடுப்பூசிகளை வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டோா், முன்கள வீரா்கள், மருத்துவத் துறையினருக்கு இலவசமாகவும், மற்றவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளிலும் அதனை வழங்கலாம்.

ஊக்கத் தவணை தடுப்பூசியின் முக்கியத்துவத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சோ்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT