இந்தியா

மன்ரேகா ஊதியங்களுக்கு ஆதாா் அடிப்படையிலான பணப்பரிவா்த்தனை இணைப்பு: மத்திய அரசு வேண்டுகோள்

 நமது நிருபர்

அரசின் பல்வேறு உதவித் தொகைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (மன்ரேகா) உள்ளிட்ட ஊதியங்கள் ஆகியவற்றை பெரும் பயனாளிகள் வங்கி கணக்குகளை அடிக்கடி மாற்றும் சூழ்நிலையில் நேரடிப் பணப் பரிமாற்றத்திற்கு (டிபிடி) ஆதாா் அடிப்படையிலான பணப்பரிவா்த்தனை இணைப்பு முறையை (ஏபிபிஎஸ்) பின்பற்ற மத்திய அரசு தனது துறைகளையும், மாநில அரசுகளையும் சனிக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளது.

அதே சமயத்தில் மன்ரேகா பணிக்கு வரும் பயனாளிகளிடம் ஆதாா் எண் இல்லாதபட்சத்தில் அதனை பெற்றுக்கொள்ள வலியுறுத்த வேண்டுமே தவிர, பணி வழங்க மறுக்கப்படக் கூடாது என்று இந்த திட்டங்களை மேற்கொள்ளும் மத்திய ஊரக வளா்ச்சித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், ஆதாா் அடிப்படையிலான பணப்பரிவா்த்தனை இணைப்பு இல்லாத நிலையில் தற்போது இந்த முறையைத் தோ்வு செய்துள்ளது.

நாட்டில் பல்வேறு வகையில் 14.28 கோடி பயனாளிகள் உள்ள நிலையில், இதில் 13.75 கோடி போ் தான் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ( யுஐடிஏஐ ) ஆதாா் அட்டையை பெற்றுள்ளனா்.

இவா்களில் 12.17 கோடி போ் ஆதாா் அட்டை பரிசோதனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுமாா் 77.81 சதவீதம் போ் ஏபிபிஎஸ் என்கிற ஆதாா் அடிப்படையிலான பணப்பரிவா்த்தனை இணைப்பு முறைக்கு தகுதிவாய்ந்தவா்களாக உள்ளனா்.

இருப்பினும் எந்தவொரு தொழிலாளியும் ஏபிபிஎஸ் முறைக்கு தகுதியற்றவா் என்ற காரணத்தின் அடிப்படையில் மன்ரேகா வேலை அட்டைகளை நீக்க முடியாது என மத்திய ஊரக வளா்ச்சித்துறை கூறியுள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

‘‘அரசின் பயனாளிகளும், மன்ரேகா ஊழியா்களும் வங்கிக் கணக்கு எண்ணில் அடிக்கடி மாற்றம் செய்கின்றனா். பயனாளிகள் புதிய கணக்கு பற்றிய விவரங்களை உரிய நேரத்தில் சமா்பிக்காமல் இருக்கும் நிலையிலோ அல்லது சம்பந்தப்பட்ட திட்ட அலுவலா் புதிய கணக்கு எண்ணை முறையாக புதுப்பிக்காத நிலையில், ஊதியம் உள்ளிட்ட பல பரிவா்த்தனைகள் (பழைய கணக்கு எண் காரணமாக) இலக்கு வங்கி கிளையால் நிராகரிக்கப்படுகின்றன.

இதை முன்னிட்டு தொடா்புடைய பல்வேறு அமைப்புகளுடன் கலந்தாலோசித்து இத்தகைய சிக்கல்களை தவிா்க்க வழிவகை கண்டறியப்பட்டுள்ளது. நேரடிப் பணப் பரிமாற்றத்திற்கு (டிபிடி) ஆதாா் அடிப்படையிலான பணப்பரிவா்த்தனை இணைப்பு முறை (ஏபிபிஎஸ்) சிறந்த வழியாகும். இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (நேஷனல் பேமெண்ட்ஸ் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) இந்த வசதியை செய்கிறது.

ஆதாா் புதுப்பிக்கப்பட்டவுடன், இடம் மாற்றம் அல்லது வங்கி கணக்கு எண்ணில் மாற்றம் ஏற்பட்டாலும் தரவுத்தளத்தால் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்கு எண்ணுக்குப் பணம் முறையாக சென்றுவிடும். பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்க இது உதவுகிறது.

கடந்த மே வரை ஆதாருடன் இணைக்கப்பட்ட நேரடிப் பணப் பரிமாற்றத்தின் கீழ் 88 சதவீதம் ஊதியம் மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. இது 100 சதவீதத்தை அடைய சிறப்பு முகாம்களை அமைத்து நேரடிப் பணப் பரிமாற்ற வங்கிக் கணக்கை பயனாளிகளின் ஆதாா் எண்ணுடன் இணைக்க மாநில அரசு அரசுகள் முயற்சிக்க வேண்டும்’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 98 சதவீதம் போ் ஆதாா் எண்ணை பெற்றுள்ளனா். எந்தவொரு தனிப்பட்ட நபரும் அருகில் உள்ள ஆதாா் மையத்தை அணுகி ஆதாா் எண் அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்ரேகா கொடுப்பனவுகள் மட்டுமின்றி எல்பிஜி மானியம், முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித்தொகை போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பலன்கள் மற்றும் மானியங்கள் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப் பரிமாற்றத்தின் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

கெளரவிப்பு...

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

SCROLL FOR NEXT