3 மணிநேரத்துக்கு மேல் தாமதமானால் விமானத்தை ரத்து செய்ய உத்தரவு!
தில்லியில் 3 மணிநேரம் தாமதம் ஏற்பட்டால் விமானத்தை ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு.
தில்லியில் ஏற்பட்டுள்ள காற்றுமாசு காரணமாக விமானங்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், 3 மணிநேரத்துக்கு மேல் தாமதமானால் விமானத்தை ரத்து செய்ய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
தில்லியில் சரிந்து வரும் வெப்பநிலையும் அடா் புகை மூட்டமும் நாளுக்கு நாள் நிலைமையை மோசமாக்கி வருகின்றன. இதன் காரணமாக சாலைகளிலேயே இரவு முதல் நண்பகல் வரை பல இடங்களில் காண்புதிறன் குறைந்துள்ளது.
இதனிடையே, தில்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது கடும் சவால் நிறைந்த பணியாக மாறியுள்ளது. இதுவரை நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில் உயர்நிலைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விமானப் போக்குவரத்து சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள், வானிலை மைய அதிகாரிகள், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை மத்திய அமைச்சகம் வெளியிட்டது.
விமான தாமதங்கள் குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்குமாறும், பயண இடையூறுகளைக் குறைக்க செக்-இன் கவுண்டர்களில் அதிகளவிலான பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்யுமாறும் விமான நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், 3 மணிநேரத்துக்கு மேல் விமானத்தை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டால், விமானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.