தோசை மாவு விஷமானதில் 2 பேர் பலி! தோண்டியெடுக்கப்படும் குழந்தை உடல்
தோசை மாவு விஷமானதில் 2 குழந்தைகள் பலியான நிலையில், ஒரு குழந்தை உடல் தோண்டியெடுக்கப்படுகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே, கடையில் வாங்கிய தோசை மாவு விஷமானதில், இரண்டு சிறுமிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெற்றோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில், மண்ணில் புதைக்கப்பட்ட 2.5 வயது குழந்தையின் உடல் கூராய்வுக்காக தோண்டியெடுக்கப்படுகிறது.
முதல்கட்டமாக, குழந்தை உயிரிழந்தபோது, அதனை காவல்துறைக்குத் தெரிவிக்காமல், அடக்கம் செய்துவிட்டனர். பிறகு, அதே வீட்டில் மற்றொரு குழந்தை மரணம் அடைந்தபோதுதான், காவல்துறையினர் விபத்தால் நிகழ்ந்த மரணம் என்ற அளவில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
Advertisement
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், சந்த்கேடா பகுதியில் ஒரு குடும்பத்தினர் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, கடையில் தோசை மாவு வாங்கி வந்து தோசை சுட்டு சாப்பிட்டிருக்கிறார்கள். பிறகு மறுநாள் காலையிலும் அதே தோசை மாவில் தோசை சுட்டு சாப்பிட்டிருக்கிறார்கள். பிறகு, அந்த குடும்பத்தில் அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பிறகு அவர்களே உடல்நிலை சீரடைந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அடுத்த நாளில் நிலைமை மோசமானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏப்.4ஆம் தேதி, 2.5 வயது குழந்தை உயிரிழந்துவிட்டது. அதன் இறுதிச் சடங்குகள் ஏப். 5ஆம் தேதி நடந்துள்ளது. பிறகு, அதே குடும்பத்தில் 3 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளது.
இப்போதுதான், இந்த தகவல் காவல்துறைக்கு வந்துள்ளது. 3 வயது குழந்தையின் உடல் கூராய்வு செய்யப்பட்டு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த மாவின் மாதிரிகளும் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஆய்வுக்கு அனுப்பி வக்கப்பட்டது.
இந்த நிலையில், 2.5 வயது குழந்தையின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு உடல் கூராய்வு செய்யப்படுகிறது.
இது குறித்து தோசை விற்பனை செய்த கடையில் விசாரணை நடத்தியபோது, ஒரு நாளில் 100 கிலோவுக்குமேல் மாவு விற்பனை செய்கிறோம். மாவு விஷமாகியிருந்தால் பலரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
குழந்தைகளின் உடல்கூராய்வு முடிவுகள் வெளியான பிறகே உண்மை நிலவரம் தெரிய வரும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.