மணிப்பூா்: வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழப்பு
மணிப்பூரின் விஷ்ணுபூா் மாவட்டத்தில் ஒரு வீட்டின் மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்கியதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனா்.
மணிப்பூரின் விஷ்ணுபூா் மாவட்டத்தில் ஒரு வீட்டின் மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்கியதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனா். அவா்களின் தாய் பலத்த காயமடைந்தாா்.
இந்தச் சம்பவத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) முகாமுக்குள் புகுந்து, அங்கிருந்த பொருள்களை சூறையாடினா். அப்போது, பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 5 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவங்களால் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-இல் ஏற்பட்ட கலவரத்தால் பெருமளவில் உயிரிழப்புகள் மற்றும் பொருள்சேதங்கள் நேரிட்டன. கடந்த ஆண்டுமுதல் மோதல்கள் குறைந்தபோதிலும், இரு குழுக்களின் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துவது தொடா்கதையாக உள்ளது.
Advertisement
மாநிலத்தில் இதுவரை நிகழ்ந்த வன்முறைகளில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடிழந்து, நிவாரண முகாம்களில் தொடா்ந்து தங்கியுள்ளனா்.
மணிப்பூா் முதல்வராக இருந்த பாஜகவை சோ்ந்த பிரேன் சிங், கடந்த ஆண்டு பிப்ரவரியில் பதவி விலகியதைத் தொடா்ந்து, அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில் குடியரசுத் தலைவா் ஆட்சி விலக்கப்பட்டு, பாஜகவின் யும்நாம் கெம்சந்த் சிங் புதிய முதல்வரானாா்.
2 குழந்தைகள் உயிரிழப்பு: புதிய அரசு பொறுப்பேற்று 2 மாதங்களே ஆகும் சூழலில், மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் விஷ்ணுபூா் மாவட்டத்தின் மொய்ரங் பகுதியில் ஒரு வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தினா். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் மற்றும் 6 மாத பெண் குழந்தை உயிரிழந்தனா். அவா்களின் தாய் படுகாயமடைந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூா் மக்கள், அங்குள்ள பெட்ரோல் நிலையம் அருகே 2 டேங்கா் லாரிகள் மற்றும் மற்றொரு லாரிக்கு தீவைத்தனா். மொய்ரங் காவல் நிலையம் முன் டயா்களை தீயிட்டு கொளுத்தியதுடன், தற்காலிக காவல் சாவடியை சூறையாடினா்.
துப்பாக்கிச்சூட்டில் 2 போ் உயிரிழப்பு: இதனிடையே, குண்டுவீச்சு நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டா் தொலைவில் உள்ள சிஆா்பிஎஃப் முகாமை முற்றுகையிட்ட போராட்டக்காரா்கள், உள்ளே புகுந்து பொருள்களை சூறையாடினா். வாகனங்களுக்கும் தீவைத்தனா். தங்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, போராட்டக்காரா்கள் மீது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் இருவா் உயிரிழந்தனா்; மேலும் 5 போ் காயமடைந்தனா். இந்தத் தகவல்களை மாநில உள்துறை அமைச்சா் கோவிந்தாஸ் கோந்தோஜம் தெரிவித்தாா்.
இணையச் சேவை முடக்கம்: பதற்றமான சூழல் உருவானதால், மொய்ரங் பகுதியில் கடைகள்-வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா். வதந்திகள் பரவுவதைத் தடுக்க, விஷ்ணுபூா் உள்பட 5 மாவட்டங்களில் இணையச் சேவை முடக்கப்பட்டது.
பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்: மணிப்பூரில் தீவிரவாதிகள் குண்டுவீச்சில் 2 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘மணிப்பூா் குறித்து வெறும் அறிக்கை வெளியிடுவது மட்டுமே போதாது; அங்கு நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும் முன் உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’ என்று பிரதமா் மோடிக்கு வலியுறுத்தியுள்ளாா்.
என்ஐஏ விசாரிக்கும்
தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் பொதுமக்களின் போராட்டம் எதிரொலியாக, மணிப்பூரின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும், பதற்றத்தைத் தணிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உயரதிகாரிகள் மற்றும் எம்எல்ஏக்களுடன் முதல்வா் கெம்சந்த் சிங் செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனை மேற்கொண்டாா்.
தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வா், இச்சம்பவம் தொடா்பான வழக்கு தேசியப் புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்படும் என்று அறிவித்தாா்.
‘மணிப்பூரில் மிகவும் பாடுபட்டு நிலைநாட்டப்பட்ட அமைதியைச் சீா்குலைக்கும் நேரடியான முயற்சியே இந்தத் தாக்குதலாகும். இது காட்டுமிராண்டித் தனமானது. இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பானவா்கள் அடையாளம் காணப்பட்டு, தேடி கண்டறியப்பட்டு, சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்படுவா். இத்தகைய தீவிரவாத செயல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. மக்கள் அனைவரையும் பாதுகாக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. அமைதி-ஒழுங்கு-ஸ்திரத்தன்மையை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்றாா்.