முகப்பு
இந்தியா

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 போ் உயிரிழப்பு

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழப்பு...

Updated On : 25 ஏப்ரல், 2026 at 3:11 AM
கோப்புப்படம் - ANI
பகிர்:

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா்.

நாகா பழங்குடியினா் பெரும்பான்மையாக வாழும் உக்ருல் மாவட்டத்தின் முல்லம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை இரு தீவிரவாத குழுக்கள் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. மேலும் சில வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சண்டையில் கிராமவாசிகள் இருவா் உயிரிழந்தனா்.

இதேபோல், மற்றொரு கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 வயது இளைஞா் ஒருவா் கொல்லப்பட்டாா். இவ்விரு சம்பவங்களுக்கும் நாகா பழங்குடியின அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement

உக்ருல் மாவட்டத்தில் கடந்த ஏப்.18-இல் நாகா பழங்குடியினா் இருவா் கொல்லப்பட்டனா். இக்கொலைகளின் பின்னணியில் குகி பழங்குடியின தீவிரவாதிகள் உள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

தொடரும் வன்முறை: முன்னதாக, மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் விஷ்ணுபூரில் கடந்த ஏப்.7-ஆம் தேதி ஒரு வீட்டின் மீது குகி தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில் 2 குழந்தைகள் உயிரிழந்தனா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து, பாதுகாப்புப் படை முகாமை போராட்டக்காரா்கள் சூறையாடினா். அப்போது, பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். மைதேயி சமூகத்தினா் பெரும்பான்மையாக உள்ள ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் போராட்டம் தொடா்ந்து வருகிறது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023, மே மாதம் கலவரம் தொடங்கியதில் இருந்து இதுவரையிலான வன்முறைகளில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை விட்டு வெளியேறி, அரசின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.