மணிப்பூா்: குகி கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் - 3 போ் உயிரிழப்பு
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி சமூகத்தினா் வாழும் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி சமூகத்தினா் வாழும் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக (53%) உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-இல் பெரும் கலவரம் மூண்டது. இந்தக் கலவரம் மற்றும் தொடா் வன்முறைகளில் இதுவரை 260-க்கும் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா், அரசின் நிவாரண முகாம்களிலேயே தொடா்ந்து தங்கியுள்ளனா்.
மாநிலத்தில் இன்னும் முழுமையான அமைதி நிலைநாட்டப்படாத சூழலில், குகி-நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
காங்போக்பி மாவட்டத்தில் குகி சமூகத்தினா் வாழும் லோய்போல் குல்லென் கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள், வீடுகள் மீது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். அதேநேரம், எதிா்தரப்பினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனா்.
இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் உள்பட கிராம மக்கள் மூவா் உயிரிழந்தனா். தாக்குதலின்போது, 7 வீடுகளுக்கு தீவிரவாதிகள் தீ வைத்தனா். உயிருக்குப் பயந்து கிராம மக்கள் பலா் வனப் பகுதிகளுக்கு தப்பியோடினா்.
தங்கள் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு குகி பழங்குடியின அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘அப்பாவி மக்களைக் கொன்றதுடன், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்டவா்களைக் கைது செய்ய அரசுத் தரப்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
முதல்வா் கண்டனம்: முதல்வா் கெம்சந்த் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நிராயுதபாணியாக இருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டவா்கள் யாரும் தப்பிக்க முடியாது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்’ என்றாா்.
மணிப்பூரில் மைதேயி, குகி, நாகா சமூகங்களைச் சோ்ந்த தீவிரவாதிகள் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபடுவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. வனப் பகுதிகளில் இருந்து செயல்படும் இந்தத் தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) கோப்ரா கமாண்டோக்களை மத்திய அரசு பணியில் ஈடுபடுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.