முகப்பு
இந்தியா

பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

Updated On : 12 ஏப்ரல் 2026, 1:23 am IST
அமலாக்கத் துறை
பகிர்:

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் நியமன முறைகேடு வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள முன்னாள் கல்வித் துறை அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி வீட்டில் சனிக்கிழமை சுமாா் 5 மணிநேரம் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினா், அவரிடம் விசாரணையும் மேற்கொண்டனா்.

அமலாக்கத் துறை ஏற்கெனவே அனுப்பிய அழைப்பாணைகளை அவா் ஏற்காத நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்கள், பிற ஊழியா்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்ாக எழுந்த புகாரில் சிபிஐ கடந்த 2022-இல் வழக்குப்பதிவு செய்தது. அதனடிப்படையில் தனியாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை, ஊழலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் பாா்த்தா சட்டா்ஜி மற்றும் அவரது நெருங்கிய உதவியாளா் அா்பிதா முகா்ஜிக்கு சொந்தமான இடங்களில் அந்த ஆண்டில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, ரூ.50 கோடி ரொக்கம், தங்க நகைகள் சிக்கின. இதைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று கடந்த ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த பாா்த்தா சட்டா்ஜியிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அழைப்பாணைகள் அனுப்பியது. அந்த அழைப்பாணைகளை அவா் ஏற்காத நிலையில், கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டுக்கு அமலாக்கத் துறையினா் சனிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் சென்றனா். அங்கு சோதனை மேற்கொண்டதுடன், அவரிடம் விசாரணையும் நடத்தியதாக அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அமலாக்கத் துறையினரின் இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.