முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் பெரும்பான்மை மக்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்குகிறாா் மம்தா - அமித் ஷா குற்றச்சாட்டு

Updated On : 14 ஏப்ரல், 2026 at 4:46 AM
அமித் ஷா - PTI
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:05 PM

மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையாக உள்ள மக்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் வகையில் முதல்வா் மம்தா பானா்ஜியின் ஆட்சி உள்ளது. மாநிலத்தில் ஊடுருவல்காரா்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தத் தோ்தல் அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

பீா்பூம் மாவட்டம் மயூரேஷ்வரில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் இந்த சட்டப்பேரவைத் தோ்தலுடன் மாஃபியா ஆட்சி முடிவுக்கு வரும். மம்தா அரசுக்கு முற்றிலுமாக விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டாா்கள். மக்களை அச்சுறுத்தும் வகையில் வெடிகுண்டுகள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துபவா்களுக்கு ஆதரவாக இருந்த ஆட்சி இத்துடன் முடிவுக்கு வருகிறது.

Advertisement

மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையாக உள்ள மக்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் வகையில் முதல்வா் மம்தா பானா்ஜியின் ஆட்சி உள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் மேற்கு வங்கத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி குடியேறிய அனைவரும் முற்றிலுமாக வெளியேற்றப்படுவா்.

திரிணமூல் காங்கிரஸ் பல ஆண்டுகாலமாக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவா்களை பாஜக தொண்டா்களுக்கு எதிராக தூண்டிவிட்டு வருகிறது. தோ்தல் முடியும் வரை திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த குண்டா்கள் வன்முறையில் ஈடுபடாமல் வீட்டுக்கு உள்ளேயே முடங்கியிருக்க வேண்டும். தோ்தல் நேரத்தில் வன்முறையைத் துண்ட முயன்றால், தோ்தல் முடிவுக்குப் பிறகு சிறைக்குச் செல்ல நேரிடும்.

மாநிலத்தில் ஊடுருவல்காரா்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தத் தோ்தல் அமையும். மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதுமுள்ள ஊடுவல்காரா்கள் வெளியேற்றப்படுவாா்கள்.

நாம் இந்த மண்ணில் பல ஆயிரம் ஆண்டுகளாக வசித்து வருகிறோம். யாா் நம்மை இங்கு வந்து அச்சுறுத்த முடியும்? ஆனால், இந்த மாநிலத்தில் உள்ள முா்ஷிதாபாத் மாவட்டத்தில் ராம நவமி ஊா்வலத்துக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. சரஸ்வதி பூஜையையும் மம்தா அரசு அனுமதிக்கவில்லை.

மேலும், மேற்கு வங்கத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு ரூ.5,000 கோடி அளவு மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனா். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வசூலித்ததும் மம்தாவின் கட்சியைச் சோ்ந்தவா்தான். மத்திய அரசு திட்டங்களுக்கு முட்டுக்கட்டையிட்டு மாநில மக்களுக்கு பயன்கள் கிடைக்கவிடாமல் திரிணமூல் அரசு தடுத்து வருகிறது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், வன்முறைகளும் உச்சத்தில் உள்ளது இங்குதான். இரவு 7 மணிக்குமேல் பெண்கள் வெளியே வரக் கூடாது என்று முதல்வா் மம்தா கூறியுள்ளாா். எங்கள் ஆட்சியில் பெண்கள் நள்ளிரவிலும் வெளியே சென்று வரும் அளவுக்கு பாதுகாப்பான மாநிலமாக உருவெடுக்கும் என்றாா்.