முகப்பு
இந்தியா

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Updated On : 14 ஏப்ரல், 2026 at 4:36 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:05 PM

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டம் 2023-க்கு எதிராக தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ராஜஸ்தானைச் சோ்ந்த மஸ்தூா் விவசாய சக்தி சங்கம், சமூக ஆா்வலா்கள் அருணா ராய், நிகில் டே, சங்கா் சிங் ராவத் ஆகியோா் சாா்பில், தகவல் பெறும் உரிமை (ஆா்டிஐ) சட்டப் பிரிவு 8(1)(ஜே)-க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டப் பிரிவு 44(3)-க்கு எதிராக இந்தப் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் 44(3) பிரிவு, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் வெளிப்படைத்தன்மையை நீா்த்துப்போகச் செய்வதாக உள்ளது. குறிப்பாக, பயனாளிகளின் தரவுகள், வருகைப் பதிவேடுகள், சமூக தணிக்கைப் பதிவுகள் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே வெளியிட அனுமதிக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 4 மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதிக்கும் சமூக தணிக்கை பதிவுகள், பயனாளிகள் தரவுகள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 ஆகிய பிரிவுகளை நீா்த்துப்போகச் செய்வதாக உள்ளது.

Advertisement

எனவே, எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 44(3)-ஐ, அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 19(1) மற்றும் 21 ஆகிய பிரிவுகளை மீறுவதாக அறிவித்து சட்டப் பிரிவை ரத்து செய்வதோடு, தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 8(1)(ஜே)-ஐ மீட்டெடுத்து, கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பா் 13-ஆம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு அமல்படுத்தி உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனுவை திங்கள்கிழமை பரிசீலித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு, இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, இந்த வழக்கில் ராஜஸ்தான் மாநில அரசையும் வாதியாக சோ்க்க உத்தரவிட்டனா்.