கல்வி, மத போதனைகளை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வழிகாட்டுதல் கோரி மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
கல்வி, மத போதனைகளை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வழிகாட்டுதல் கோரி மனு...
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி அல்லது மத போதனைகளை வழங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்த வழிகாட்டுதல் வகுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மே 11) விசாரணைக்கு வர உள்ளது.
வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாயவின் இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரிக்க உள்ளது.
பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: அரசமைப்ச் சட்டப் பிரிவு 19 (1) (ஜி)-இன் கீழ் சிறுபான்மையினருக்கு ஏற்கெனவே உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளைத் தவிர, வேறெந்த சிறப்பு அல்லது கூடுதல் உரிமைகளை சட்டப் பிரிவு 30 வழங்கிவிடவில்லை. எனவே, ஷரத்து 30 என்பது, சட்டப் பிரிவு 19 (1) (ஜி)-இல் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீண்டும் வலியுறுத்துகிறதே தவிர, வேறெந்த சிறப்புரிமைகள் அல்லது கூடுதல் உரிமைகளை வழங்கவில்லை என்று உத்தரவிட வேண்டும்.
Advertisement
மேலும், சட்டப் பிரிவு 21 (ஏ) மற்றும் சட்டப் பிரிவுகள் 39 (எஃப்), 45, 51-ஏ (கே) ஆகிய பிரிவுகளின்படி, 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மத போதனைகளை வழங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் பதிவு செய்யவும், அங்கீகரிக்கவும், மேற்பாா்வையிடவும், கண்காணிக்கவும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கென உரிய வழிகாட்டுதல்களை வகுக்கவும் உத்தரவிட வேண்டும்.
குழந்தைகள் தேசத்தின் வளா்ச்சியில் முதுகெலும்பு போன்றவா்கள், அவா்கள் மீது அரசுக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது. அவா்கள் தேசத்தின் எதிா்காலமாக உள்ள நிலையில், பதிவு செய்யப்படாத நிறுவனங்களால் அவா்கள் மூளைச்சலவை செய்யப்பட வாய்ப்புள்ளது. இது ஒரு தேச பாதுகாப்பு தொடா்பான பிரச்னை. குறிப்பாக, உத்தர பிரதேச மாநிலத்தில் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இதுபோல பல பதிவு செய்யப்படாத மதம் சாா்ந்த கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.