நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!
நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
புது தில்லி : நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு தில்லி உயர்நீதிமன்றத்தில் நாளை(ஏப். 20) விசாரணைக்கு வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் பணத்தை பயன்படுத்தி நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்திருந்தாா். இதையடுத்து, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, நேஷனல் ஹெரால்டு வழக்கில் சுப்பிரமணிய சுவாமி அளித்த புகாரின் பேரில், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, தில்லி நீதிமன்றம் நிராகரித்தது.
Advertisement
இந்நிலையில், நீதிமன்ற முடிவை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு நீதிபதி சுவரணா காந்தா சர்மா அமர்வு முன்னிலையில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.