கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பெயிண்ட் விலை உயர்த்தும் நிறுவனங்களைப் பற்றி...
ஈரான் - அமெரிக்கா இடையேயான போரால், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக பெயிண்ட் விலையை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் இருக்கும் ஈரான் அணுசக்தித் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்று கூறி, பிப். 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் மதகுரு உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து உலக வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் கடல்வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.
இதனால், கச்சா எண்ணெய் ஏற்றிவரும் கப்பல்கள் நடுக்கடலில் தத்தளித்தன. இதனால், கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு இந்தியா உள்பட பல நாடுகளில் எதிரொலித்தது.
Advertisement
மேற்காசியப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட 6-10 சதவிகிதம் விலை உயர்வைத் தொடர்ந்து விலையை உயர்த்தப் போவதாக தெரிவித்துள்ளன.
நாட்டின் மிகப்பெரிய பெயிண்ட் நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ், மே 5 ஆம் தேதி முதல் தனது பெயிண்ட் விலையை 3 - 5 சதவிகிதம் வரை உயர்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.
பெயிண்ட் உற்பத்திக்கான பொருள்கள் கிடைப்பதில் உள்ள பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், இந்த விலை உயர்வு முடிவை எடுத்துள்ளதாகவும், இதனால், உற்பத்தி பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசியன் பெயிண்ட்ஸ் விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில், பிர்லா ஓபஸ் 8-10 சதவிகித விலை உயர்வை அறிவித்துள்ளது. முன்னதாக, ஜனவரியில் 2-4 சதவிகிதம் வரை விலையை உயர்த்தியிருந்தது.
பெர்கர், ஜே.எஸ்.டபிள்யூ-டூலக்ஸ், கன்சாய் நெரோலாக் மற்றும் இண்டிகோ போன்ற பிற நிறுவனங்களும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இரண்டு முதல் மூன்று கட்டங்களாக 6 முதல் 8 சதவிகிதம் வரையிலான விலை உயர்வை அறிவித்திருந்தன.
சந்தை நிலவரங்களின்படி, முன்னணி நிறுவனங்கள் மீண்டும் 6 முதல் 8 சதவிகிதம் வரை விலையை உயர்த்தக்கூடும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போது 90 டாலர்களாக இருக்கும் கச்சா எண்ணெய்யின் விலை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 20 சதவிகிதம் வரை உயரும் என்பதால் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மூலப்பொருள்களின் உற்பத்தியை ஈடுசெய்வதற்காகவே விலையை உயர்த்தியுள்ளதாகவும், இன்னும் 5 முதல் 7 சதவிகிதம் வரை விலை உயர்வை எதிர்பார்க்கலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.