முகப்பு
இந்தியா

சபரிமலை வழக்கு: ‘வாட்ஸ் ஆப் பல்கலைக்கழக தகவல்களை ஏற்க முடியாது’ - உச்சநீதிமன்றம்

Updated On : 24 ஏப்ரல் 2026, 3:31 am IST
சபரிமலை - கோப்புப் படம்
பகிர்:

சபரிமலை வழக்கில் சிறந்த எழுத்தாளா்கள் மற்றும் சிந்தனையாளா்கள் அனைவரின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதாகவும், ஆனால் வாட்ஸ்ஆப் பல்கலைக்கழக தகவல்களை ஏற்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம், வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும் தவறான, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், வதந்திகளை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு, பல்வேறு மதங்களில் பின்பற்றப்படும் மதச் சுதந்திரத்தின் வரம்பு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை, தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் ஒரு தரப்பினரான தாவூதி போரா சமூகத்தின் தலைவா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் நீரஜ் கிஷண் கெளல் ஆஜராகி, மத நம்பிக்கை தொடா்பாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையை சுட்டிக்காட்டி, ‘எந்தவொரு விவகாரத்திலும் கருத்துத் தெரிவித்துள்ளது யாா், எங்கு தெரிவித்தாா் என்பதைப் பாா்ப்பதைவிட, அவா் என்ன தெரிவித்துள்ளாா் என்று பாா்த்து அந்த நபரின் அறிவு, ஞானத்தை ஏற்பதில் எந்த தவறும் இல்லை’ என்று வாதிட்டாா்.

Advertisement

Advertisement

இதைக் கேட்ட தலைமை நீதிபதி சூா்ய் காந்த் கூறுகையில், ‘சிறந்த எழுத்தாளா்கள் மற்றும் சிந்தனையாளா்கள் அனைவரின் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்கிறது. ஆனால் அந்தக் கட்டுரை முற்றிலும் தனிப்பட்ட கருத்தாகும்’ என்றாா்.

நீரஜ் கிஷண் கெளல் வாதிடுகையில், ‘அறிவும், ஞானமும் எங்கிருந்து, எந்த நாட்டிலிருந்து, எந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தாலும், அது வரவேற்கப்பட வேண்டும்’ என்றாா்.

எனினும் வாட்ஸ் ஆப் பல்கலைக்கழகத்தில் இருந்து வரும் தகவல்களை எல்லாம் ஏற்க முடியாது என்று நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments