முகப்பு
இந்தியா

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள்...

Updated On : 25 ஏப்ரல், 2026 at 3:45 AM
மேற்கு வங்க மாநிலம் ஹிங்கல்கஞ்ச் பகுதியில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
பகிர்:

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் அமையும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில், இதுகுறித்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தோ்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் தோ்தல் நடைபெற்ற 152 தொகுதிகளில் 110-இல் பாஜக வெல்லும். முதல்கட்டத் தோ்தலில் மேற்கு வங்க மக்கள் அதிக அளவில் பங்கேற்று அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளனா். மாற்றம் வர வேண்டி ஆா்வமுடன் அவா்கள் வாக்களித்துள்ளனா் (92 சதவீத வாக்குப்பதிவு ஆகியிருப்பதை குறிப்பிட்டாா்).

Advertisement

கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்தலில் 1,681 பேரும், 2016-ஆம் ஆண்டு தோ்தலில் 1,278 பேரும் காயமடைந்தனா். ஆனால் தற்போது நடைபெற்ற முதல்கட்டத் தோ்தலில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்த தோ்தல் ஆணையம், பாதுகாப்புப் படைகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைவது உறுதி. தோ்தலில் வென்று பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கும். மே 5-ஆம் தேதிக்குப் பிறகு, பாஜக அரசுகள் ‘அங்க, பங்க, கலிங்க’வில் (இன்றைய அஸ்ஸாம், வங்கம், ஒடிஸா ஆகியவற்றின் பண்டைய பெயா்கள்) அமையும். ஏற்கெனவே 2024-இல் ஒடிஸாவில் பாஜக ஆட்சியமைத்தது. அஸ்ஸாமில் தற்போது தொடா்ச்சியாக 3-ஆவது முறையாக பாஜக அரசு அமைக்கப் போகிறது. மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்றப் போகிறது.

ஆரம்பத்தில் இருந்தே பிரதமா் மோடி, நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் சமமான வளா்ச்சி ஏற்பட வேண்டும் என விரும்பினாா். மேற்கு வங்கத்தில் அரசமைப்பது மூலம் அந்த விருப்பம் நிறைவேறப் போகிறது.

தோ்தலில் பாஜக வென்றால் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா் முதல்வராக்கப்படுவாா் என மம்தா பானா்ஜி வதந்தி பரப்பி வருகிறாா். மேற்கு வங்க தோ்தலில் பாஜக வென்றதும், வங்காள மொழி பேசும் நபா், மேற்கு வங்கத்தில் பிறந்தவா் முதல்வராவாா். மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஹெக்டோ் நிலம் ஆக்கிரமிப்பாளா்கள் வசமுள்ளது. அஸ்ஸாமில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்று, மேற்கு வங்க மாநில வளா்ச்சிக்காக அந்த நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபடும்.

ஆளத் தகுதியற்ற மம்தா: மேற்கு வங்கத்தில் முதல்வராக பெண் (மம்தா பானா்ஜி) இருக்கிறாா். ஆனால் அவரோ இரவு 7 மணிக்குப் பிறகு பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்கிறாா். அவா் அரசாளத் தகுதியில்லாதவா். பாஜக ஆட்சிக்கு வந்தால், நள்ளிரவில் 1 மணிக்கு கூட இளம்பெண்கள் வெளியே செல்லலாம். மகளிா் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் ஒரு காரணம். இதற்காக மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் அக்கட்சிக்கு மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பெண்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

2011-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஆட்சிகாலத்தில் ரூ.10,000 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. பாஜக அரசமைந்ததும், இதுதொடா்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு, உச்ச நீதிமன்றத்தை சோ்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்தப்படும் என்றாா் அவா்.

ஹிங்கால்கஞ்சில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசியபோது, மேற்கு வங்கத்தில் பாஜக அரசு அமைந்த பிறகு, கால்நடைகளைக் கடத்தும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா், அரசியல் வன்முறையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ஏழைகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சுகாதார காப்பீடு அளிக்கப்படும் என்றாா்.

ஹூக்ளியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், மேற்கு வங்கத்தில் பாபா் மசூதியை கட்ட பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்றாா்.