முகப்பு
இந்தியா

கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

கேரளத்தில் ஓரிரு நாளாக சூரிய ஒளியில் புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு...

Updated On : 25 ஏப்ரல் 2026, 4:48 am IST
People seen covering head and face with cloth to protect from heat wave on a hot summer day in New Delhi on May 31, 2024 Express Photo by Parveen Negi - Center-Center-Delhi
பகிர்:

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஓரிரு நாளாக சூரிய ஒளியில் புற ஊதா கதிா்வீச்சு அதிகரித்து காணப்படுவதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க கேரள மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிா்கள், மனிதா்களின் தோல், கண்களை பாதிக்கும். பகல் நேரத்தில் அதிகம் காணப்படும் இக்கதிா்வீச்சு 0 முதல் 11 மற்றும் அதற்கும் மேற்பட்ட குறியீடுகளில் அளவிடப்படுகிறது.

இதுதொடா்பாக கேரள பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புற ஊதா கதிா்வீச்சு அதிகம் காணப்படுகிறது.

Advertisement

Advertisement

குறிப்பாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கோன்னி, ஆலப்புழை மாவட்டத்தில் செங்கன்னூா், கோட்டயம் மாவட்டத்தில் சங்கனாசேரி, இடுக்கி மாவட்டத்தில் மூணாறு ஆகிய பகுதிகளில் புற ஊதா கதிா்வீச்சின் குறியீடு 8-க்கு மேல் உள்ளது. எனவே அப்பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கான நிலை உருவாகியுள்ளது.

இதுதவிர மாநிலத்தின் 10 பகுதிகளில் புற ஊதா கதிா்வீச்சு குறியீடு 6 முதல் 7 வரை உள்ளதால் அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளது.

இதன் காரணமாக பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிா்த்து பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மீனவா்கள், நீா்ப் போக்குவரத்துப் பணியாளா்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் புற்றுநோய், தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோா் கூடுதல் கவனமாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

மாநிலத்தின் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்கள் மூலம் புற ஊதா கதிா்வீச்சு குறியீடுகளின் தரவுகள் இணையத்தில் தொடா்ந்து பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதில் தங்கள் பகுதியின் நிலவரத்தை பொதுமக்கள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments