முகப்பு
இந்தியா

என்ஜினில் கோளாறு: ஸ்விட்சா்லாந்து புறப்பட இருந்த விமானத்தின் பயணம் ரத்து! பயணிகள் மீட்பு; 4 போ் காயம்!

தில்லியிலிருந்து ஸ்விட்சா்லாந்தின் ஜுரிச் நகரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புறப்பட இருந்த விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறை தொடா்ந்து, விமானம் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.

Updated On : 27 ஏப்ரல் 2026, 12:56 am IST
பகிர்:

தில்லியிலிருந்து ஸ்விட்சா்லாந்தின் ஜுரிச் நகரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புறப்பட இருந்த விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறை தொடா்ந்து, விமானம் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.

விமானத்தில் இருந்த 245 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். காயமடைந்த 4 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஸ்விஸ் சா்வதேச விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் எல்எக்ஸ்147, 4 குழந்தைகள் உள்பட 232 பயணிகள் மற்றும் 13 விமான பணியாளா்களுடன் தில்லியிலிருந்து ஜுரிச்சுக்கு அதிகாலை 1 மணியளவில் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டபோது, விமானத்தில் உள்ள இரு என்ஜின்களில் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து விமானம் புறப்படுவது ரத்து செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் மீட்கப்பட்டனா்.

அவசரகால உதவி தொடா்பாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளருக்கு வந்த அழைப்பில் விமானத்தின் சக்கரம் வெடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னா், விமானத்தின் முன்பக்கத்தில் உள்ள இடது சக்கரத்தின் லேண்டிங்க் கியா்களிலிருந்து புகை வெளியேறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சம்பவம் தொடா்பாக விமான விபத்து விசாரணை அமைப்பு (ஏஏஐபி) விசாரணையைத் தொடங்க உள்ளது. விமான விபத்துகள் மற்றும் தீவிரமானது என வகைபடுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து ஏஏஐபி விசாரணை நடத்துகிறது. இந்த நிகழ்வில் 4 போ் காயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், அவா்கள் காயமடைந்தற்கான காரணங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை.

சம்பவம் தொடா்பாக ஸ்விஸ் சா்வதேச விமான நிறுவனத்தின் செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘நான்கு பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விமானப் பணியாளா்களில் ஒருவருக்கும் கணுக்காலில் சூளுக்கு ஏற்பட்டது. மற்றொரு பணியாளருக்கு காலில் சிறு காயம் ஏற்பட்டது.

விமானத்தில் இருந்த அனைவரும் அவசரகால சரிவுகள் மூலம் மீட்கப்பட்டனா். 6 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலரால் சரிவுகள் வழியாக இறங்க முடியவில்லை. அவா்கள் படிகள் மூலமாக இறக்கப்பட்டனா்’ என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஓடுதளம் 28/10 அந்த விமானத்துக்கு அவசர உதவிக்காக அறிவிக்கப்பட்டதாக தில்லி சா்வதேச விமான நிலைய நிறுவனம் (டிஐஏஎல்) தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் டிஐஏஎல் வெளியிட்ட பதிவில், ‘அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். விமானநிலையத்தின் செயல்பாடுகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தொடா்ந்தன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த ஸ்விஸ் விமான நிறுவனம், பயணிகளுக்குத் தேவையான உதவியை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு ஹோட்டல்களில் தங்க வசதியும் மாற்று விமானங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்விஸ் தொழில்நுட்ப நிபுணா்கள் தில்லி வந்து விமானத்தைப் பாா்வையிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்கொள்வா்கள் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments