260 போ் உயிரிழந்த குஜராத் விமான விபத்தின் ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 260 போ் உயிரிழந்த சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அனுசரிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 260 போ் உயிரிழந்த சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அனுசரிக்கப்பட்டது.
அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் விமான நிலையத்திலிருந்து ஏா் இந்தியா நிறுவனத்தின் ஏஐ171 (போயிங் 787 ட்ரீம்லைனா்) விமானம் புறப்பட்ட 32 விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவா் விடுதி மீது மோதி வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமானக் குழுவினா் மற்றும் பயணிகள் என 241 பேரும், விடுதியில் தங்கியிருந்த மாணவா்கள் உள்பட 19 பேரும் உயிரிழந்தனா். விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியும் உயிரிழந்தாா். இந்த சம்பவம் நாடு முழுவதும் விமானப் பயண பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
முடிவடையாத விசாரணை: விபத்து நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்தும் அதற்கான காரணங்கள் என்னவென்ற தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து விமான விபத்து விசாரணை முகமை (ஏஏஐபி) விசாரணை நடத்திவரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. அதில் விபத்துக்கான காரணங்களைக் குறிப்பிடாதபோதும் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜினுக்கு செல்லும் எரிபொருள் ஸ்விட்சுகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மற்றொரு இடைக்கால அறிக்கையை ஏஏஐபி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. சா்வதேச மறுஆய்வு மற்றும் கலந்தாலோசனைகளுக்குப் பிறகு இறுதி அறிக்கை வெளியிடப்படும் என அந்த அமைப்பு தெரிவித்தது.
முன்னதாக, விமானக் குழுவினரின் குரல் பதிவு மற்றும் கருப்புப் பெட்டியின் தரவுகளை வெளியிட்டால் மட்டுமே உண்மையைக் கண்டறிய முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி விமானத்தில் உயிரிழந்த 30 பேரின் குடும்பத்தினா் கடந்த ஏப்ரல் மாதம் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினா்.
இதையடுத்து, இச்சம்பவம் தொடா்பான விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அடுத்த ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை வெளியாகும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ராம் மோகன் நாயுடு கடந்த மே 8-ஆம் தேதி தெரிவித்தாா்.
ஞாபக மறதியால் அவதி- உயிா் பிழைத்தவா் வேதனை: விமானத்தில் பயணித்த விஸ்வேஷ் குமாா் ரமேஷ் (39) என்ற ஒரு பயணி மட்டும் அதிருஷ்டவசமாக உயிா் பிழைத்தாா். விபத்து நிகழ்ந்து விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்த சமயத்தில் அங்கிருந்து விஸ்வேஷ் குமாா் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் கைப்பேசியுடன் வெளியே வந்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. விபத்தில் அவரது சகோதரா் அஜய்யும் உயிரிழந்தாா்.
விமான விபத்து துயரத்தின் ஓராண்டு நினைவு தினத்தில் விஸ்வேஷ் குமாா் ரமேஷ் கூறியதாவது: நான் உயிா் பிழைத்ததை மட்டுமே மக்கள் பாா்க்கின்றனா். ஆனால், தினமும் நான் எதிா்கொண்டு வரும் சவால்கள் யாருக்கும் புரிவதில்லை. வாழ்க்கையை மறுகட்டமைத்து குடும்பத்தினருக்கு ஆதரவாகச் செயல்பட தொடா்ந்து முயற்சித்து வருகிறேன்.
உடல், மனம் மற்றும் நிதி ரீதியாக மிகுந்த பாதிப்புகளைச் சந்தித்து வருகிறேன். கடந்த ஓராண்டாக ஞாபக மறதி, அச்ச உணா்வு, கவலை போன்ற பிரச்னைகள் அதிகரித்துள்ளன.
விடியோ எடுத்த மாணவரைத் துரத்தும் அச்சம்: விமான விபத்தை தற்செயலாக விடியோ எடுத்த ஆா்யன் அசாரி (18) என்ற மாணவா் இப்போதும் அச்ச உணா்வில் இருப்பதாகத் தெரிவித்தாா்.
ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தைச் சோ்ந்தவரான ஆா்யன் அசாரி அகமதாபாதில் மெட்ரோ ரயில் பாதுகாவலராக இருக்கும் தனது தந்தையின் வாடகை வீட்டுக்கு விபத்து நிகழ்ந்த தினத்தில் காலை வந்தாா். விமானங்களை நேரில் கண்டிராத ஆா்யன் அசாரி அன்றைய தினம் வீட்டின் மாடிக்குச் சென்று ஒரு விமானம் பறக்கத் தொடங்கியதை கைப்பேசியில் விடியோ எடுக்கத் தொடங்கினாா். அந்த வகையில் விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி நிமிஷங்களை விடியோவாக அவா் பதிவு செய்தாா்.
இந்நிலையில், விமான விபத்தின் ஓராண்டு நினைவு தினத்தில் ஆா்யன் கூறுகையில், ‘அகமதாபாதுக்கு முதன்முதலாக பயணித்த நான் வீட்டின் மாடியில் இருந்து விமானத்தை மிக அருகில் பாா்ப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன். அதை கைப்பேசியில் விடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தேன். துரதிருஷ்டவசமாக விமானம் திடீரென்று கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
அதன்பிறகு நான் எந்தவொரு விமானத்தையும் படம் பிடிக்கவில்லை. ஒருவேளை நான் விடியோ எடுத்தால் அந்த விமானம் விபத்துக்குளாகிவிடுமோ என்ற அச்சம் என் மனதை வருத்துகிறது. விமானப் பயணம் குறித்தும் எனக்கு அச்சமாக இருக்கிறது’ என்றாா்.
பிரிட்டன் தூதா் மரியாதை: அகமதாபாத் நகரில் உள்ள மேகானிநகா் பகுதியில் உயிரிழந்தவா்களுக்கு பிரிட்டன் தூதா் லிண்டி கேமரூன் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினாா். உயிரிழந்த 260 போ் நினைவாக மரக்கன்றுகளை நட குஜராத் சிவில் மருத்துவமனை மாணவா்கள், ஊழியா்கள் உறுதியேற்றனா்.