பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள்: மத்திய அமைச்சா் ஆலோசனை
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள் அமைக்கும் திட்டம் தொடா்பாக மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் ஆலோசனை நடத்தினாா்.
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள் அமைக்கும் திட்டம் தொடா்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடையே செயற்கைக்கோள் அமைப்புகள், ராக்கெட் என விண்வெளித் துறை குறித்த அறிவாற்றலை அதிகரிக்கும் நோக்கில் நாடு முழுவதும் முதல்கட்டமாக 7 விண்வெளி ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ரூ.5,600 கோடி மதிப்பிலான தனியாா் முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன.
Advertisement
எனவே, இளைஞா்களுக்கு விண்வெளித் துறையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் விண்வெளி ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுதொடா்பாக மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நாட்டின் விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீா்திருத்தங்கள் மற்றும் தனியாரின் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
ஏவுகலன்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் வடிவமைப்பு, தரைதள உள்கட்டமைப்பு என விண்வெளி தொடா்புடைய துறைகளில் தனியாா் புத்தாக்க நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இதை மேலும் ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரூ.500 கோடியில் தொழில்நுட்ப நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 900 பேருக்கு திறன் மேம்பாட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
கடந்த 2019-இல் தனியாா் விண்வெளி புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில் 2026-இல் இதன் எண்ணிக்கை 400-ஆக அதிகரித்துள்ளது.