அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 40-45 பில்லியன் டாலரை எட்டும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் விண்வெளிப் பொருளாதாரம் 45 பில்லியன் டாலரை எட்டும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருப்பது தொடர்பாக...
இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா அடைந்துள்ள பெரும் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 40 முதல் 45 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளித் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் விண்வெளிப் பொருளாதாரம் தற்போதுள்ள 8 முதல் 9 பில்லியன் டாலர் அளவிலிருந்து, அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 40 முதல் 45 பில்லியன் டாலராக வளரவுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
கொள்கை சீர்திருத்தங்கள், அதிகரித்து வரும் தனியார் பங்களிப்பு, மற்றும் வேகமாக விரிவடைந்து வரும் புத்தாக்கச் சூழல் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு உந்துசக்தியாக உள்ளன.
Advertisement
Advertisement
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆய்வகங்களைத் தாண்டி நாட்டின் பொது உணர்வின் ஒரு பகுதியாக மாறியுள்ள நிலையில், நாட்டின் விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் ஒரு பரந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
சமீபத்திய ஆண்டுகளில் அறிவியல் மற்றும் சமூகத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள வலுவான பிணைப்பு மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாகும். மக்கள் தங்களை நாட்டின் அறிவியல் முன்னேற்றத்தில் பங்குதாரர்களாகக் கருதுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பொது விவாதங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது, அறிவியல் சார்ந்த முன்னெடுப்புகளைத் தொடர்ந்து தேசிய நீரோட்டத்தில் இணைத்து வரும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது.
தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் ஹெல்த், ஆழ்கடல் ஆய்வுத் திட்டம் மற்றும் ககன்யான் போன்ற திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அறிவியலையும் புத்தாக்கத்தையும் நிலைநிறுத்த உதவியுள்ளன. அறிவியல் - தொழில்நுட்ப நிகழ்வுகளில் பிரதான ஊடகங்களின் பங்கேற்பு அதிகரிப்பே, அறிவியல் முன்னேற்றங்களில் பொதுமக்களின் ஆர்வம் வளர்ந்து வருவதைப் பிரதிபலிக்கிறது.
சந்திரயான்-3 போன்ற திட்டங்கள் விண்வெளி அறிவியலை பரவலான பொதுமக்களின் ஆர்வத்திற்குரிய ஒரு விஷயமாக மாற்றியுள்ளதோடு, நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத விழிப்புணர்வையும் ஈடுபாட்டையும் உருவாக்கியுள்ளன.
விண்வெளி, அணுசக்தி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் போன்ற முக்கியத் துறைகளில் நாட்டின் வளர்ந்து வரும் திறன்கள், உலக அரங்கில் நாட்டின் நிலையை வலுப்படுத்தியுள்ளன. இந்த சாதனைகள் மூலம் ஏற்பட்டுள்ள நம்பிக்கை, உள்நாட்டு தொழில்நுட்பங்களின் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளதுடன், ஒரு நம்பகமான தொழில்நுட்ப நாடாக இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
மேலும் மாட்டின் அறிவியல் சாதனைகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப தன்னிறைவு மற்றும் உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றிற்குப் பெருமளவு பங்களித்து வருகின்றன என்று ஜிதேந்திர சிங் கூறினார்.
Union Minister Dr Jitendra Singh today said India’s space economy is poised to grow from the current 8 to 9 billion dollars to nearly 40 to 45 billion dollars over the next decade
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.