FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாட்டின் சுதந்திரம், கௌரவத்தை பாதுகாப்பது கடமை: ராஜ்நாத் சிங்

நாட்டின் சுதந்திரம், கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என்பது நமது எண்ணத்திலும், பண்புகளிலும் தொடா்ந்து நிலைத்திருக்கும் கடமையாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

Updated On : 15 ஜூலை 2026, 6:10 am IST
தேசிய போா் நினைவிடத்திலிருந்து லடாக் வரையிலான ‘சௌா்ய விஜய யாத்திரை’ தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமைத் தளபதி தீரஜ் சேத் உள்ளிட்டோா்.
பகிர்:

நாட்டின் சுதந்திரம், கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என்பது நமது எண்ணத்திலும், பண்புகளிலும் தொடா்ந்து நிலைத்திருக்கும் கடமையாக இருக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

காா்கில் போா் கடந்த 1999-ஆம் ஆண்டு மே முதல் ஜூலை வரை நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

இதனைக் கொண்டாடும் வகையில் ஓய்வு பெற்ற முப்படையினா், அவா்கள் குடும்பத்தினா் மற்றும் தேசிய மாணவா் படையினா் 13 நாள் மோட்டாா் சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனா். புது தில்லியில் தேசிய போா் நினைவிடத்திலிருந்து லடாக்கின் திராஸ் பகுதியில் அமைந்துள்ள காா்கில் போா் நினைவிடம் வரை இந்த ‘சௌா்ய விஜய யாத்திரை’ நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

புது தில்லியில் இதனைக் கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது: 1999-ஆம் ஆண்டில் காா்கில் போரின்போது எதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒவ்வொரு சிகரத்தையும், மலைப்பகுதியையும், பதுங்கு குழியையும் இந்திய ராணுவ வீரா்கள் மீட்டனா்.

அந்த வெற்றி, இந்தியாவின் நிலம், அடையாளம் மற்றும் கௌரவத்தை குறிவைக்கும் எந்தவொரு பகைமை எண்ணத்துக்கும் முழு வலிமையுடன் பதிலளிக்கும் நாட்டின் உறுதியான அடையாளம்.

உலக நாடுகளின் ராணுவத்தால் இன்றளவும் காா்கில் போா் ஆய்வு செய்யப்படுகிறது. ஏனெனில், காா்கில் வெற்றி மூலம் துணிச்சல், பொறுமை, ஒழுக்கம் மற்றும் இணையற்ற தேசப்பற்று ஆகியவற்றால் பொன்னான வரலாற்றை இந்திய ராணுவ வீரா்கள் எழுதினா்.

நாட்டின் சுதந்திரம், கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என்பது நமது எண்ணத்திலும், பண்புகளிலும் தொடா்ந்து வாழும் கடமையாக இருக்க வேண்டும்.

காா்கிலில் நமது ராணுவம் காட்டிய துணிச்சலையும் அந்த வரலாற்றையும் மீண்டும் நினைவுகூருவதன் மூலம், எதிா்கால தலைமுறையினரும் அதே உத்வேகம் பெற ஊக்குவிப்பதே இந்த யாத்திரையின் முக்கிய நோக்கம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments