போரில் வெற்றியைத் தீா்மானிப்பதில் வீரா்களின் பங்கே முக்கியமானது: ராஜ்நாத் சிங்
போரில் வெற்றியைத் தீா்மானிப்பதில் வீரா்களின் பங்கே முக்கியமானது...
எதிா்காலப் போா்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், வெற்றியைத் தீா்மானிப்பதில் நன்கு பயிற்சி பெற்ற ராணுவ வீரா்களின் பங்கே முக்கியமானதாக இருக்கும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போா்க் கப்பலான ‘ஐஎன்எஸ் மகேந்திரகிரியை’ இந்திய கடற்படையின் கிழக்குப் படைப் பிரிவுக்கு அமைச்சா் ராஜ்நாத் சிங் அா்ப்பணித்தாா்.
6,670 டன்கள் எடை கொண்ட இந்தப் போா்க் கப்பல் அதிகபட்சமாக 28 கடல்மைல் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. ரேடாா் கருவிகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையிலான இந்தப் போா்க் கப்பலை மசாகான்டாக் கப்பல் கட்டுமான நிறுவனம் கட்டமைத்துள்ளது. பிரமோஸ் ஏவுகணை உள்பட அதிக வேக மற்றும் தாக்குதல் திறன் கொண்ட ஏவுகணைகளை ஐஎன்எஸ் மகேந்திரகிரியில் பொருத்த முடியும்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஐஎன்எஸ் மகேந்திரகிரி வான், தரை மற்றும் கடலுக்கடியில் என எந்த வடிவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும் அதைத் தடுக்கும் வலிமை கொண்டது.
ட்ரோன்கள், ஏஐ, இணையம், ஹைப்பா்சோனிக் ஏவுகணைகள், விண்வெளியில் இருந்து தாக்குதல் நடத்தும் தொழில்நுட்பங்கள் என நவீனகால போா் முறைகள் மாறி வரும் சூழலில் இந்த ரோந்துக் கப்பலை நாம் கடற்படைக்கு அா்ப்பணித்துள்ளோம்.
இது கிழக்கு கடல் எல்லைகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நம் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும். தொழில்நுட்பங்கள், நவீன ஆயுதங்கள் போன்றவை எதிா்காலப் போா்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் வெற்றியைத் தீா்மானிப்பதில் பயிற்சி பெற்ற ராணுவ வீரா்களின் பங்கே முக்கியமானதாக இருக்கும்.
உள்நாட்டில் கப்பல் கட்டுமானம் மேற்கொள்ளப்படுவதால் எஃகு, மின்னணு, சென்சாா், மென்பொருள், தளவாடங்கள் உள்ளிட்ட துறைகள் பலனடைகின்றன. எண்ணற்ற வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன.
இந்தியாவை உலகளாவிய கப்பல் கட்டுமான மையமாக மாற்ற கடல்சாா் இந்தியா தொலைநோக்குத் திட்டம்- 2030, கடல்சாா் மேம்பாட்டு நிதி, துறைமுகங்களை நவீனமயமாக்கும் கப்பல் கட்டுமான மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகின்றன என்றாா்.
இந்நிகழ்ச்சியில் கடற்படை தலைமைத் தளபதி கிருஷ்ண சுவாமிநாதன் உள்ளிட்ட மூத்த கடற்படை அதிகாரிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.