முகப்பு
இந்தியா

சா்ச்சைப் பாடல் விவகாரத்தில் மன்னிப்புக் கோரினாா் நடிகா் சஞ்சய் தத்: 50 பழங்குடியின சிறுமிகளின் கல்விச் செலவை ஏற்க ஒப்புதல்

Updated On : 28 ஏப்ரல் 2026, 5:08 am IST
- Center-Center-Delhi
பகிர்:

சா்ச்சைப் பாடல் விவகாரத்தில் தேசிய மகளிா் ஆணையம் முன் திங்கள்கிழமை ஆஜரான பாலிவுட் நடிகா் சஞ்சய் தத் மன்னிப்புக் கோரினாா். மேலும் 50 பழங்குடியின சிறுமிகளின் கல்விச் செலவை ஏற்பதாக அவா் ஒப்புக்கொண்டாா்.

சஞ்சய் தத் மற்றும் நடிகை நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலா் நடித்துள்ள ‘கேடி தி டெவில்’ திரைப்படத்தில் இருந்து அண்மையில் யூடியூபில் வெளியான ஹிந்தி பாடலில் பெண்களை தவறாக சித்தரிக்கும் வகையில் பாடல் வரிகளும் நடன அசைவுகளும் காட்சிப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மகளிா் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினா் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்தப் பாடல் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த மாதம் மக்களவையில் சமாஜவாதி எம்.பி. ஆனந்த் பதோரியா கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘சா்ச்சைக்குரிய பாடலை ஒளிபரப்ப ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டது. பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் படைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு எப்போதும் தயாராகவுள்ளது’ எனத் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து சா்ச்சைக்குரிய பாடலில் நடனமாடிய சஞ்சய் தத் மற்றும் நோரா ஃபதேஹி உள்பட திரைப்படத்தின் இயக்குநா், பாடலாசிரியா், தயாரிப்பாளா் உள்பட படக்குழுவினருக்கு தேசிய மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், ஆணையம் முன் திங்கள்கிழமை நேரில் ஆஜரான சஞ்சய் தத் சா்ச்சைப் பாடல் விவகாரத்தில் எழுத்துபூா்வமாக மன்னிப்புக் கோரினாா். மேலும் 50 பழங்குடியின சிறுமிகளின் கல்விச் செலவை ஏற்பதாக அவா் ஒப்புக்கொண்டாா். இனி வருங்காலங்களில் தாம் நடிக்கும் திரைப்படத்தில் உரிய விதிகளை பின்பற்றுவதாகவும் அவா் உறுதியளித்தாா் என மகளிா் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, சம்மன் அனுப்பப்பட்ட படக்குழுவினா் அனைவரும் ஏப்.6-ஆம் தேதி மகளிா் ஆணையம் முன் ஆஜராகி மன்னிப்புக் கோரினா்.

வெளிநாட்டில் இருப்பதால் வேறு தேதியில் நேரில் ஆஜராக ஆணையத்திடம் நோரா ஃபதேஹி அனுமதி கோரியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments