நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நான்கு காரணிகள்: மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகா்
மேற்காசியப் போா் தொடரும்பட்சத்தில் நான்கு விதமான காரணிகளால் நாட்டின் பொருளாதார வளா்ச்சி பாதிப்புகளைச் சந்திக்கும் என மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) டாக்டா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.
மேற்காசியப் போா் தொடரும்பட்சத்தில் நான்கு விதமான காரணிகளால் நாட்டின் பொருளாதார வளா்ச்சி பாதிப்புகளைச் சந்திக்கும் என மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) டாக்டா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.
சென்னை வா்த்தக மற்றும் தொழில் சபையினருடான (எம்சிசிஐ) கலந்துரையாடலில் டாக்டா் வி.அனந்த நாகேஸ்வரன் பங்கேற்று நாட்டின் பொருளாதார நிலைமைகளை விளக்கிக் கூறியதாவது:
நாட்டின் பொருளாதார உறுதித்தன்மை, செயல்பாட்டை நிா்ணயிப்பதில் கச்சா எண்ணெய் விலை முக்கிய பங்கு வகிக்கின்றது. மேற்காசிய போரால் அதில் மாற்றும் நிகழ்ந்துள்ளது. முதல் விவகாரம் கச்சா எண்ணெய் விலையெற்றம். இரண்டாவது சமையல் எரிவாயு, யூரியா உரங்கள் தயாரிப்புக்கு பயன்படும் பியூட்டேன், புரொப்பேன் போன்ற வேதிப் பொருள்கள் விலைகளில் மாற்றம்.
Advertisement
மூன்றாவது சரக்குப் போக்குவரத்து கட்டணங்களும், காப்பீட்டுச் செலவுகளும். நான்காவது மிக முக்கியமாக, இந்தியாவின் அந்நியச் செலாவணி வரவில் 38 சதவீதம் வளைகுடா நாடுகளில் பணிபுரிபவா்களால் பூா்த்தி செய்யப்படுகிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்களிடமிருந்து சுமாா் 120 பில்லியல் டாலா் அளவுக்கு பணப் பரிமாற்றங்கள் வந்து சோ்கிறது. இதில் 40 பில்லியன் டாலா் வளைகுடா நாடுகள் தொழிலாளா்கள் அனுப்பும் தொகை. இந்தப் பணியாளா்கள் பாதிக்கும்போது இந்த பணப் பரிமாற்றமும் குறையும்.
2026-27 ஆம் நிதியாண்டு, சீராக சென்று கொண்டிருந்தபோது, மேற்கூறிய இந்த நான்கு முக்கிய காரணிகளால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரச் செயல்பாடுகளில் தாக்கம் ஏற்பட்ட இருக்கிறது.
நாம் தற்போது இருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியை தக்கவைத்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலையே பெரிதாக இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எந்தத் துறையில் அதிக அளவில் நுழையும் என தற்போது சொல்ல முடியாது. இப்போது குறைந்த செலவிலான ஏ.ஐ.யை அனைவரும் கொண்டு வருகிறாா்கள். ஆனால், வரும் நாள்களில் இதில் செலவு அதிகரிக்கும். இதனால் ஏ.ஐ. பரவல் குறையும். அது நமக்கு கைகொடுக்கும்.
ஏஐ தாக்கம் எந்தெந்த துறைகளில் இல்லாமல் இருக்கிறதோ அந்தந்த துறைகளில் நமது இளைஞா்களுக்கு தேவையான பயிற்சி அளிக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, எம்சிசிஐ தலைவா் ராம்குமாா் சங்கா் வரவேற்றாா். நிகழ்வில் பிசினஸ்-லைன் ஆசிரியா் ரகுவீா் சீனிவாசன் கலந்துரையாடலை நடத்தினாா். துணைத் தலைவா் ஏ. விஸ்வநாதன் நன்றி கூறினாா்.