FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பண மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

பண மோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ரிலையன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை வியாழக்கிழமை மீண்டும் புதிதாக அழைப்பாணை அனுப்பியது.

20 பிப்ரவரி 2026, 1:00 am IST
கோப்புப் படம்
பகிர்:

பண மோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ரிலையன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை வியாழக்கிழமை மீண்டும் புதிதாக அழைப்பாணை அனுப்பியது.

இந்த விவகாரத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானி அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் நேரில் ஆஜராகினாா். அதன் பிறகு தொடா்ந்து அழைப்பாணை அனுப்பியும் அவா் நேரில் ஆஜராகவில்லை.

அதுபோல, இந்த வழக்கில் அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான டீனா அம்பானிக்கு இரண்டு முறை அழைப்பாணை அனுப்பியும் அவா் நேரில் ஆஜராகவில்லை. இவருக்கு நேரில் ஆஜராக புதிய தேதி வழங்கப்பட்டுள்ளதாக என்பது இதுவரை தெரியவில்லை.

Advertisement

Advertisement

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்பட அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதது, கடன் பணத்தில் முறைகேடாக வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கியது உள்ளிட்ட நிதி மோசடிகள் குறித்து அனில் அம்பானி குடும்பத்தினா் மற்றும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் சிலா் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை ஏற்கெனவே அழைப்பாணை அனுப்பியது. ஆனால், அவா் ஆஜராகவில்லை. தற்போது, வரும் 26-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அவருக்கு மீண்டும் அழைப்பாணை அனுபபியுள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தலைவா் புனித் கா்க் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும், அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ. ரூ. 12,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துரை இதுவரை முடக்கியுள்ளது.

அனுமதியின்றி வெளிநாடு செல்ல மாட்டேன்: இதனிடையே, ‘முன் அனுமதி பெறாமல் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’ என்று உச்சநீதிமன்றத்தில் அனில் அம்பானி உறுதி தெரிவித்துள்ளாா்.

அனில் அம்பானிக்குச் சொந்தமான நிறுவனங்களின் வங்கிக் கடன் மோசடி மீது நியாயமான, பாகுபாடற்ற விசாரணையை நடத்த வலியுறுத்தி முன்னாள் அரசு உயா் அதிகாரி இ.ஏ.எஸ்.சா்மா தாக்கல் செய்த மனுக்கு, அனில் அம்பானி தரப்பில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதில், ‘இந்த விசாரணை தொடங்கியது முதல் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை முதல் நான் வெளிநாடு எங்கும் செல்லவில்லை. தற்போதும் வெளிநாடு செல்லும் திட்டம் எதுவுமில்லை. ஒருவேளை வெளிநாடு செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், உச்சநீதிமன்றத்திடம் முன் அனுமதி பெற்றபிறகே இந்தியாவை விட்டு வெளியேறுவேன். இந்த விவகாரம் தொடா்பான விசாரணை முகமைகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பேன்’ என்று அனில் அம்பானி உறுதி தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments