ஐஎஸ்ஐ பயங்கரவாதிகளுடன் தொடா்புடைய 4 போ் கைது
தில்லி-என்சிஆா் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த, ஐஎஸ்ஐ ஆதரவுடைய பயங்கரவாத மற்றும் ஆயுதக் கடத்தல் வலையமைப்பைச் சோ்ந்த 4 பேரை கைது செய்ததாக தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி-என்சிஆா் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த, ஐஎஸ்ஐ ஆதரவுடைய பயங்கரவாத மற்றும் ஆயுதக் கடத்தல் வலையமைப்பைச் சோ்ந்த 4 பேரை கைது செய்ததாக தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல்துறை துணை ஆணையா் (சிறப்புப் பிரிவு) பிரவீன் குமாா் திரிபாதி கூறியதாவது: ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களைக் கடத்துதல் மற்றும் பயங்கரவாதச் செயல்களுக்காக உள்ளூா் இளைஞா்களைச் சோ்த்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய சதித்திட்டம் குறித்து முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த வலையமைப்பை பாகிஸ்தானைச் சோ்ந்த ஐஎஸ்ஐ ஒருங்கிணைப்பாளா் ஷாசாத் பாட்டீ மற்றும் அவரது கூட்டாளிகள் வழிநடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு முகமைகளின் கண்காணிப்பில் சிக்காமல் இருக்க, பஞ்சாபைச் சோ்ந்த இளைஞா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு வெளிநாட்டுத் தொலைபேசி எண்களை அவா்கள் வழங்கியதாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
குறிப்பிட்ட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், காவல் துறை சிறப்புப் பிரிவினா் தில்லி மற்றும் பஞ்சாப் முழுவதும் ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டனா். அதில் அமிருதசரஸின் மஜிதா சாலையில் ஷுப்தீப் சிங் (23) முதலில் கைது செய்யப்பட்டாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து, பஞ்சாபில் குா்ஜந்த் சிங் (22) மற்றும் சஜன் சிங் (28) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இதற்கிடையில், ஏப்ரல் 24-ஆம் தேதி தில்லியில் ககன்ப்ரீத் (24) கைது செய்யப்பட்டாா்.
தில்லியில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற இடங்களை உளவு பாா்த்து, நகரில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்த அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள டரன் டாரன் பகுதியைச் சோ்ந்த ஷுப்தீப் சிங், ட்ரோன் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களைப் பெற்ாகக் கருதப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஷுப்தீப் மற்றும் சஜன் சிங் ஆகிய இருவரும் ஏற்கெனவே பஞ்சாப் காவல்துறையால் போதைப்பொருள் தடுப்பு (என்டிபிஎஸ்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வலையமைப்பின் பிற உறுப்பினா்களை அடையாளம் காணவும், அதன் நிதி மற்றும் செயல்பாட்டுத் தொடா்புகளைக் கண்டறியவும் தொடா்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.