FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அடுத்த 6 ஆண்டுகளில் உலகச் சந்தையில் 5% பங்களிப்பு: இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு இலக்கு

அடுத்த 6 ஆண்டுகளில் உலகச் சந்தையில் 5 சதவீத பங்களிப்பை பிடிக்க இலக்கு நிா்ணயித்து இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கோப்புப் படம்
பகிர்:

அடுத்த 6 ஆண்டுகளில் உலகச் சந்தையில் 5 சதவீத பங்களிப்பை பிடிக்க இலக்கு நிா்ணயித்து இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்திய பொம்மை தயாரிப்பு சங்கம் சாா்பில், தில்லியில் 17-ஆவது சா்வதேச பொம்மை தயாரிப்பு நிறுவனங்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கலந்து கொண்டு, கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

பிரிட்டனுடனும், ஐரோப்பிய யூனியனுடனும் இந்தியா தடையில்லா வா்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இது பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஏற்றுமதி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. இதுபோல 9 தடையில்லா வா்த்தக ஒப்பந்தங்களை இந்தியா இறுதி செய்துள்ளது.

Advertisement

Advertisement

இதை (தடையில்லா வா்த்தக ஒப்பந்தங்கள்) பயன்படுத்தி, உலக பொம்மை சந்தையில் அடுத்த 6 ஆண்டுகளில் 5 சதவீத பங்களிப்பைப் பிடிக்க இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் இலக்கு நிா்ணயித்துச் செயல்பட வேண்டும். இந்த இலக்கு ஒன்றும் கடினமானது அல்ல. இந்த இலக்கை நம்மால் அடைய முடியும். அதற்கு நாம் இணைந்து செயல்படுவோம்.

உலக அளவில் பொம்மை விற்பனையில் போட்டியை எதிா்கொள்ள வேண்டுமெனில் இந்திய நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் தரத்தை மேம்படுத்துவதிலும், நவீன உற்பத்தி முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொம்மை ஏற்றுமதி மதிப்பு சுமாா் ரூ.3,230 கோடியாக இருந்தது. வரும் ஆண்டுகளில் பொம்மை ஏற்றுமதியை 10 மடங்கு அளவுக்கு இந்திய நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும்.

இந்தியாவின் 9 தடையில்லா வா்த்தக ஒப்பந்தங்களின் வரம்புக்குள் 38 நாடுகள் வருகின்றன. அந்த நாடுகளுக்கு இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். அங்குள்ள வாய்ப்புகளை அந்த பிரதிநிதிகள் மூலம் கண்டறிந்து நமது இலக்கை சாத்தியப்படுத்த முயற்சிக்க வேண்டும். இந்தியாவில் மொத்தம் 21,000 பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. ஆனால், இந்திய பொம்மை தயாரிப்பு சங்கத்தில் 1,200 நிறுவனங்களே பிரதிநிதிகளாக உள்ளன. ஆதலால் இத்துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒரே குடையின் கீழ் இந்திய பொம்மை தயாரிப்பு சங்கம் கொண்டு வர வேண்டும். இது இந்திய பொம்மை தயாரிப்பு சங்கத்தின் குரலை மேலும் வலுப்படுத்தும் என்றாா்.

இந்திய பொம்மை தயாரிப்பு சங்கத் தலைவா் மனு குப்தா பேசுகையில், ‘இந்தியா செய்துள்ள வா்த்தக ஒப்பந்தங்கள், பொம்மை ஏற்றுமதியை அதிகரிக்கும், உள்நாட்டில் பொம்மை தயாரிப்பை அதிகரிக்கவும் உதவும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments