16 நாள்களைக் கடந்த சிஜேபி உண்ணாவிரதப் போராட்டம்!
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி நடத்தி வரும் போராட்டம் 16 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 16 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி புது தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (சிஜேபி) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றது. இந்தப் போராட்டம் இன்றுடன் 16-வது நாளை எட்டியுள்ளது.
மேலும், இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், இன்றுடன் 8வது நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். உண்ணாவிரதத்தைத் தொடங்கியது முதல் அவர் சுமார் 6 கிலோ எடை குறைந்துள்ளார். அவரது ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவு குறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடலில் நீர்ச்சத்து சீராக இருப்பதாகவும், மனதளவில் அவர் விழிப்புணர்வுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டில் நடைபெற்ற குளறுபடி மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் போன்றவை மாணவர்களை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரையும் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குற்றம்சாட்டி அதற்கு பொறுப்பேற்று கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை சிஜேபி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இதுதொடர்பாக, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சிஜேபி-யின் நிறுவனர் அபிஜீத் டிப்கே, ”நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் காரணமாக உயிரிழந்த ரியா குமாரி தாபாவின் பெற்றோர் இன்று போராட்டக் களத்திற்கு வருகை தந்தனர். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரியா குமாரியின் தந்தை, தனது குடும்பத்திற்கு நேர்ந்த இழப்பு வேறு யாருக்கும் நேரக்கூடாது என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் இணைந்துள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், ரியா குமாரிக்கு அநீதி இழைத்த ஊழல் நிறைந்த அமைப்பிற்கு எதிரான போராட்டத்திலும், அவரின் பெற்றோரின் துயரத்திலும் சிஜேபி உறுதியாகத் துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிஜேபியின் போராட்டத்திற்கு விவசாயிகள் அமைப்பான ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோல, இடதுசாரி அமைப்பான 'அனைத்திந்திய மாணவர் சங்கத்தின்' உறுப்பினர்கள் பலரும் போராட்டக் களத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
உண்ணாவிரதத்தின் ஏழாவது நாளில் ரத்தச் சர்க்கரை அளவு குறைந்ததைத் தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளர் டேனிஷ் அலி நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிஜேபியின் போராட்டத்திற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மே 3 அன்று நடைபெற்றது. ஆனால், வினாத்தாள் கசிந்ததாக வந்த புகார்களைத் தொடர்ந்து அது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது.
Will Dharmendra Pradhan resign? CJP protest continues for the 16th day!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.