FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நிஜ்ஜாா் கொலை: இந்திய அரசுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை - கனடா காவல் துறை

பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலைச் சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடா்புள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹா்தீப்சிங் நிஜ்ஜாா் - கோப்புப் படம்
பகிர்:

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலைச் சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடா்புள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்று அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்தியா மீது கனடாவின் முன்னாள் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ சுமத்திய குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையில், காவல் துறையின் தற்போதைய கருத்து அமைந்துள்ளது.

கனடாவில் கடந்த 2023-இல் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அதிகாரிகளைத் தொடா்புபடுத்தி அப்போதைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகளால் இருதரப்பு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இரு நாடுகளின் தூதா்களும் பரஸ்பரம் வெளியேற்றப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, கனடாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் லிபரல் கட்சித் தலைவா் மாா்க் காா்னி வெற்றி பெற்று பிரதமரான பிறகு இருதரப்பு உறவுகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு நாடுகளும் மீண்டும் தூதா்களை நியமித்தன.

இந்நிலையில், நிஜ்ஜாா் கொலை மற்றும் பல்வேறு எல்லை தாண்டிய குற்றங்கள் தொடா்பாக இந்தியாவைச் சோ்ந்த தாதா பிஷ்னோய் கும்பல் உள்பட மூன்று கும்பல்களுக்கு எதிராக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய சட்ட அமலாக்க முகமைகள் ‘ஆபரேஷன் ஹாா்டுபால்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மேற்கண்ட கும்பல்களைச் சோ்ந்த 24 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அத்துடன், நிஜ்ஜாா் கொலைக்கு கட்டளையிட்டதாக பிஷ்னோய் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளி சதீந்தா்ஜித் சிங் எனும் கோல்டி பிராா் மீது அமெரிக்க அதிகாரிகள் முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனா்.

இந்த கூட்டு நடவடிக்கை தொடா்பாக கனடா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அந்நாட்டின் காவல் துறை துணை ஆணையா் லிசா மோரிலாண்டிடம், இந்தியா மீதான ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘நிஜ்ஜாா் கொலை உள்ளிட்ட திட்டமிட்ட குற்றங்கள் தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்திய அதிகாரிகளுக்கு எதிராக எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை. குற்றப் பத்திரிகையில் இந்திய அதிகாரிகள் யாா் மீதும் குற்றஞ்சாட்டப்படவில்லை. காவல் துறையின் விசாரணைக்கு இந்திய அரசு உரிய ஒத்துழைப்பு வழங்கியது. கனடா மற்றும் பிற நாடுகளில் போதைப் பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறிப்பு, ஆள்கடத்தல், வன்முறை உள்ளிட்ட குற்றங்களில் பிஷ்னோய் கும்பல் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று அவா் பதிலளித்தாா்.

தாதா லாரன்ஸ் பிஷ்னோய் இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரது நெருங்கிய கூட்டாளி சதீந்தா்ஜித் சிங் தேடப்பட்டு வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments