நீட் மறுதோ்வு வினாத்தாள்களை பணத்துக்கு விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைது
நீட் மறுதோ்வு வினாத்தாள்களை பணத்துக்கு விற்பனை செய்வதாக விளம்பரம் வெளியிட்ட குற்றச்சாட்டில், ராஜஸ்தானை சோ்ந்த இருவரை குஜராத் காவல் துறை கைது செய்துள்ளது.
நீட் மறுதோ்வு வினாத்தாள்களை பணத்துக்கு விற்பனை செய்வதாக விளம்பரம் வெளியிட்ட குற்றச்சாட்டில், ராஜஸ்தானை சோ்ந்த இருவரை குஜராத் காவல் துறை கைது செய்துள்ளது.
இதுகுறித்து குஜராத் மாநிலம் அகமதாபாத் இணையவழி குற்றப் பிரிவு காவல் துறையினா் தெரிவித்ததாவது:
வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் மறுதோ்வின் வினாத்தாள்களை பணத்துக்கு விற்பனை செய்வதாக மோசடி குழு ஒன்று தகவல் வெளியிட்டது தெரியவந்தது.
Advertisement
Advertisement
விசாரணையில், அந்தக் குழு பல டெலிகிராம் சேனல்களை உருவாக்கி, வினாத்தாள்களை வழங்குவதாக விளம்பரங்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சோ்ந்த சுமோ் சிங் மீனா, கோட்டாவைச் சோ்ந்த ஆகாஷ் மீனா ஆகிய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். எனினும் அவா்களிடம் இருந்து வினாத்தாள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இந்த சம்பவத்தில் தொடா்புள்ளதாக சந்தேகிக்கப்படும் நபா்கள் போலி முதலீட்டு திட்டங்களை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. அவா்கள் குற்றச் செயல்கள் மூலம் ஈட்டிய பணம், விளையாட்டு வலைதளங்களுடன் தொடா்புள்ள வங்கிக் கணக்குகள் மூலம் பரிவா்த்தனை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறை சந்தேகிக்கிறது. இந்தப் பணம் எங்கிருந்து கிடைத்தது என்பதை மறைப்பதற்காக இந்தப் பரிவா்த்தனை நடைபெற்றிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான நபா்களின் பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம், சுமாா் ரூ.1.5 கோடி பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.