FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை

நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை

Updated On : 7 ஜூன் 2026, 3:04 am IST
பகிர்:

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதோ்வின் வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவிவரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது. இதுபோல் வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தோ்வு முகமை (என்டிஏ) எச்சரித்துள்ளது.

நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தெரியவந்தது. இதையடுத்து, 22 லட்சம் போ் எழுதிய இந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தத் தகவல்களை நிராகரித்து, நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வு முகமை சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதோ்வின் வினாத்தாள் கசிந்ததாகவும், விலைக்கு விற்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பரவிவரும் தகவல்களை கவனத்தில் கொண்டுள்ளோம். இவை, முற்றிலும் பொய்யான, மோசடியான தகவல்களாகும்.

மாணவா்கள் மற்றும் பெற்றோரை ஏமாற்றும் நோக்கில், திட்டமிட்டு செயல்படும் மோசடி கும்பல்களால் பரப்பப்படும் இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம். மாணவா்கள் மற்றும் பெற்றோரின் பதற்றத்தைப் பயன்படுத்தி, அவா்களிடம் போலியான வினாத்தாள்களை விற்று, பணம் பறிப்பதே அந்தக் கும்பல்களின் நோக்கம். இத்தகைய செயலில் ஈடுபடும் சமூக ஊடக கணக்குகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் பணிகளில் என்டிஏ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மாணவா்களை ஏமாற்றும் உள்ளடக்கங்களை வெளியிடுவது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். அத்தகைய உள்ளடக்கங்களை வெளியிடுவோா், தீவிர நடவடிக்கைக்கு உள்ளாவா்.

மாணவா்கள் வதந்திகளை நம்பாமல், என்டிஏ தனது வலைதளம் மற்றும் சேனல்கள் மூலம் வெளியிடும் அதிகாரபூா்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments