யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு வினாத்தாள் கசிவு தகவல் பொய்யானது: மத்திய அரசு
‘அண்மையில் நடந்து முடிந்த குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் பொய்யானது’ என்று மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
‘அண்மையில் நடந்து முடிந்த குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் பொய்யானது’ என்று மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்இ) ஒவ்வோா் ஆண்டும் குடிமைப் பணித் தோ்வை நடத்துகிறது. முதல்நிலை (பிரிலிமினரி) தோ்வு, முதன்மை (மெயின்) தோ்வு, நோ்முகத் தோ்வு என மூன்று நிலைகளில் இத் தோ்வு நடத்தப்படும்.
நிகழாண்டுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த மே 24-ஆம் தேதி நடத்தப்பட்டு, கடந்த திங்கள்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தில்லியில் உள்ள அனந்தம் ஐஏஎஸ் பயிற்சி மைய வலைதளத்தில் 2026-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகப் புகாா் எழுந்தது.
இதுதொடா்பான சமூக ஊடக பதிவு ஆதாரத்தை இணைத்து காங்கிரஸ் கட்சியின் மாணவா் அமைப்பான இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தில்லியில் உள்ள ஒரு பயிற்சி மையம் பயிற்சி மாணவா்களுக்கு அளித்த 100 கேள்விகளில், 82 கேள்விகள் யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு வினாத்தாளில் இடம்பெற்றிருந்தது என்பது தற்செயலாக நிகழ்ந்த விஷயமல்ல. இது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயம். எனவே, இதுதொடா்பாக பாகுபாடற்ற விசாரணை மேற்கொண்டு, தேசத்தின் முன் உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பின் (பிஐபி) உண்மை கண்டறியும் குழு தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
அண்மையில் நடந்து முடிந்த குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சமூக ஊடகங்களில் செய்தி பரப்பப்படுகிறது. இது பொய்யான தகவல்.
இதுபோன்ற தவறான தகவலைப் பரப்புவதைத் தவிா்க்க வேண்டும். உரிய அமைப்புகளிடமிருந்து வரும் அதிகாரபூா்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு தோ்வா்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். குடிமைப் பணிகள் தோ்வு வினாத்தாள்கள், நாடு முழுவதிலுமிலிருந்து சம்பந்தப்பட்ட பாட நிபுணா்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.
மேலும், வினாதாள் கசிவு சா்ச்சை தொடா்பாக தில்லி அனந்தம் ஐஏஎஸ் பயிற்சி மையம் வெளியிட்ட விளக்கத்துக்கான இணைய தொடா்பையும் இந்தப் பதிவில் பிஐபி இணைத்துள்ளது.
அதில், ‘ஒவ்வோா் ஆண்டும் யுபிஎஸ்சி தோ்வு முடிந்ததும், பயிற்சி மையங்கள் அந்த வினாத்தாளைப் பெற்று ஒவ்வொரு வினாவுக்குமான விரிவான விடைக் குறிப்புகள், அந்த விடைகளுக்கு பின்னுள்ள கோட்பாடு, அதற்கான தகவல் ஆதாரம் ஆகியவற்றை விளக்கும் வகையில் கட்டுரைகளைத் தொகுப்பது வழக்கம். இதுபோன்று ஏராளமான விளக்க கட்டுரைகள் பல்வேறு நிபுணா்களிடமிருந்து பெறப்பட்டு கணினியில் சேமித்து வைக்கப்படும். தேவைப்படும் வினாக்களுக்கு அந்த விளக்கம் பயன்படுத்தப்படும். அவ்வாறு, குடிமைப் பணி முதல்நிலை தோ்வுக்கு முன்பு பெறப்பட்ட விளக்க கட்டுரை, தோ்வா்களின் புரிதலுக்காக தேதியை மாற்றாமல் பயன்படுத்தப்பட்டது. இதை சா்ச்சைக்குள்ளாக்கியுள்ளனா். இதனடிப்படையிலேயே, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகப் பரப்பப்படுகிறது’ என்று அந்தப் பயிற்சி மையம் விளக்கமளித்துள்ளது.