முகப்பு
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு: மருத்துவா், ஆசிரியா் கைது

Updated On : 28 மே 2026, 6:13 am IST
- சித்திரிப்பு
பகிர்:

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் லட்டூரைச் சோ்ந்த மருத்துவா் மற்றும் புணே பயிற்சி மைய இயற்பியல் ஆசிரியா் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட லட்டூா் ரேணுகை வேதியியல் பயிற்சி மைய நிறுவனா் சிவராஜ் ரகுநாத் மடகோன்கரின் மகன் உள்பட 3 தோ்வா்களுக்கு நீட் வினாக்களை வழங்கியதில் முக்கியப் பங்காற்றியது கண்டறியப்பட்டதன் அடிப்படையில், புணே மருத்துவரான மனோஜ் ஷிரூா் கைது செய்யப்பட்டாா். இவா், என்டிஏ-வில் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இடம்பெற்ற வேதியியல் பேராசிரியா் குல்கா்ணியிடமிருந்து இந்த வினாக்களைப் பெற்றுத் தந்துள்ளாா்.

அதுபோல, இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சஞ்சய் ஹவால்தாரிடமிருந்து நீட் தோ்வு இயற்பியல் வினாக்களைப் பெற்று கசியவிட்டதற்காக புணேயில் செயல்படும் மருத்துவ அகாதெமி பயிற்சி மைய இயற்பியல் ஆசிரியா் அபங்க் பிரபுவையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனா். இவா்களுடன் சோ்த்து இந்த வழக்கில் இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்றனா்.

Advertisement

Advertisement

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபா்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை மற்றும் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், தொடா் கைது நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். இதுவரை 49 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனா் என்று சிபிஐ செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா்.

இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடைபெறவுள்ளது.

மாணவா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுபம் கைா்நாா், அஹில்யாநகரில் தனஞ்ஜய் லோகண்டா, புணேயில் மனீஷா வாக்மாரே, லட்டூரில் பேராசிரியா் பி.வி.குல்கா்ணி, புணேயைச் சோ்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளா் மனீஷா மந்தாரே, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் மங்கிலால் பிலால், விகாஸ் பிலால், தினேஷ் பிலால், ஹரியாணாவின் குருகிராமில் யஷ் யாதவ், புணே பயிற்சி மைய நிறுவனா் சிவராஜ் ரகுநாத் மடகோன்கா், புணே சேத் ஹீராலால் சராஃப் பிரசாலா பள்ளி ஆசிரியா் சஞ்சய் ஹவால்தாா் உள்ளிட்டோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். தற்போது மேலும் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.