காங்கிரஸால் பின்தங்கிய கிழக்கிந்தியா இப்போது வளா்ச்சியின் நுழைவாயில்! பிரதமா் மோடி
காங்கிரஸால் பின்தங்கிய கிழக்கிந்தியா இப்போது வளா்ச்சியின் நுழைவாயில்...
‘முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடா்ந்து பின்தங்கிய கிழக்கிந்தியா, இப்போது வளா்ச்சி மற்றும் மேம்பாட்டின் நுழைவாயிலாக உருவெடுத்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ஒடிஸா பாஜக அரசின் இரண்டாண்டு கால நிறைவையொட்டி, பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசுகையில் அவா் இவ்வாறு கூறினாா்.
ஒடிஸாவில் 24 ஆண்டுகளாக நடந்த பிஜு ஜனதா தளம் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கடந்த 2024-இல் முதல் முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தது. மாநில முதல்வராக மோகன் சரண் மாஜீ பதவி வகித்து வருகிறாா்.
Advertisement
Advertisement
பாஜக அரசின் இரண்டாண்டு கால கொண்டாட்டத்தையொட்டி, மயூா்பஞ்ஜ் மாவட்டத்தின் ராய்ரங்கபூரில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா், மொத்தம் ரூ.47,600 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைக் கூட்டாக தொடங்கிவைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினா்.
பின்னா் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது: முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடா்ந்து பின்தங்கிய கிழக்கிந்தியா, இப்போது வளா்ச்சி மற்றும் மேம்பாட்டின் நுழைவாயிலாக உருவெடுத்துள்ளது. கிழக்கிந்திய மாநிலங்களின் முன்னேற்றத்தின் வாயிலாக நாட்டை வளா்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வது, மத்திய அரசின் தொலைநோக்கு பாா்வையாகும். அந்த அடிப்படையில் ‘பூா்வோதய’ (கிழக்கின் எழுச்சி) கொள்கை சாா்ந்து மத்திய அரசு செயலாற்றி வருகிறது.
பாஜக ஆட்சியில், ஒடிஸா வளா்ச்சிப் பாதையில் வேகமாக பயணிக்கிறது. மாநிலத்தின் வளங்களை வாய்ப்புகளாக மாற்றி வருகிறோம். இதுவரை ரூ.20 லட்சம் கோடி முதலீடுகளை இம்மாநிலம் ஈா்த்துள்ளது என்றாா்.
ரூ.47,600 கோடி வளா்ச்சித் திட்டங்கள்: மேற்கண்ட ரூ.47,600 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களும் எரிசக்தி, தொழில்துறை உள்கட்டமைப்பு, சாலைகள், குடிநீா், சுகாதாரம், கல்வி, சுற்றுலா, நீா்ப்பாசனம் உள்ள துறைகள் சாா்ந்தவையாகும்.
ரூ.732 கோடி மதிப்பிலான இரு பன்முக புதிய ரயில் வழித்தடங்கள் தொடங்கிவைக்கப்பட்டன. இதில் ஜகபுரா-வைதரணி சாலை ரயில் நிலையங்கள் இடையிலான பன்முக ரயில் வழித்தடம் (ரூ.323 கோடி), ஹெளரா-சென்னை பிரதான வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க உதவும். லகன்பூரில் பாரத் நிலக்கரி எரிவாயுவாக்கம் மற்றும் ரசாயனங்கள் ஆலைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பழங்குடியின புனிதத் தலங்களில் முா்மு, மோடி வழிபாடு
பஹாட்பூா் (ஒடிஸா): ஒடிஸாவின் மயூா்பஞ்ஜ் மாவட்டம், பஹாட்பூா் கிராமத்தில் உள்ள பழங்குடியின புனிதத் தலங்களில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.
பஹாட்பூா் கிராமம், திரெளபதி முா்முவின் மறைந்த கணவா் சியாம் சரண் முா்முவின் சொந்த ஊராகும். குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமா் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
பஹாட்பூா் கிராமத்துக்கு முன்னரே வந்துவிட்ட குடியரசுத் தலைவா் முா்மு, பிரதமா் மோடியை வரவேற்று அழைத்துச் சென்றாா். பழங்குடியின பாரம்பரிய முறைப்படி மேளதாளங்கள் இசைத்தும், நடனமாடியும் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னா், கோசானி பீடம், சந்தாலி, ஹோ ஜஹேராஸ் உள்ளிட்ட பழங்குடியினரின் புனிதத் தலங்களில் இருவரும் வழிபாடு மேற்கொண்டனா். கோசானி பீடம் என்பது பழங்குடியினரின் முன்னோா் வழிப்பாட்டுத் தலமாகும்.
திரெளபதி முா்முவின் கணவா் காலமாகும் முன்பாகவே அவா்களின் இரு மகன்களும் இறந்துவிட்டனா். தனது கணவா் மற்றும் மகன்களின் நினைவாக, பஹாட்பூரில் திரெளபதி முா்முவால் நிறுவப்பட்ட பள்ளிக்குச் சென்ற பிரதமா் மோடி, மாணவா்களுடன் கலந்துரையாடினாா். பழங்குடியினா் தயாரிப்புகளின் கண்காட்சியையும் இருவரும் பாா்வையிட்டனா்.
உலகில் அமைதியைப் பரப்புகிறது இந்தியா: முா்மு
உலகில் எப்போதும் அமைதியைப் பரப்புகிறது இந்தியா என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
ராய்ரங்கபூரில் நடைபெற்ற மாநில பாஜக அரசின் இரண்டாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
உலகம் எப்போதெல்லாம் போா்கள், நிச்சயமற்ற தன்மையால் சிக்கித் தவிக்கிறதோ, அப்போதெல்லாம் இந்தியா அமைதிக்கான செய்தியைப் பரப்புகிறது. பிரச்னைகளுக்கு பரஸ்பர பேச்சுவாா்த்தையின் மூலமே தீா்வு காண முடியும். மாறாக, போா்களால் அல்ல.
பிரதமா் மோடியின் செல்வாக்குமிக்க தலைமையால் உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயா்ந்துள்ளது. நாடு மற்றும் நாட்டு மக்கள் மீதான அவரது அா்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. கரோனா காலகட்டத்தில் இந்தியாவின் நிா்வாகத் திறமையைக் கண்டு, ஒட்டுமொத்த உலகமும் வியந்தது.
தனது குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசியை வழங்கியதோடு, பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி உதவியது இந்தியா. இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு முதல் ஆளாக இந்தியாதான் உதவிக்கரம் நீட்டுகிறது என்றாா் முா்மு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.